கல்வியோடு விளையாட்டிலும் நம் இளைஞர்கள் சிறக்கட்டும்!- ராஜா முத்துப்பாண்டிக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து

ஆண்களுக்கான 65 கிலோ உடல் எடை பிரிவில் கலந்து கொண்ட அவர் ஸ்னாட்ச் முறையில் 126 கிலோவும், கிளீன் மற்றும் ஜெர்க் முறையில் 160 கிலோவும் ஆக மொத்தம் 286 கிலோ தூக்கி 2-வது இடத்தை பிடித்தார்.
ராஜா முத்துப்பாண்டி- மு.க.ஸ்டாலின்
ராஜா முத்துப்பாண்டி- மு.க.ஸ்டாலின்
Published on

முன்னாள் முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின், காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் பளுதூக்குதலில் வெள்ளிப்பதக்கம் வென்ற தமிழக வீரர் ராஜா முத்துப்பாண்டிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

வெள்ளிப்பதக்கம்

23-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஸ்காட்லாந்தில் உள்ள கிளாஸ்கோ நகரில் நடைபெற்று வருகிறது. இதில் 126 பேர் கொண்ட இந்திய அணி பங்கேற்றுள்ளது. இதில் நேற்று நள்ளிரவில் நடைபெற்ற போட்டியில் தமிழக பளு தூக்கும் வீரர் ராஜா முத்துப்பாண்டி வெள்ளிப்பதக்கம் வென்றார்.

ஆண்களுக்கான 65 கிலோ உடல் எடை பிரிவில் கலந்து கொண்ட அவர் ஸ்னாட்ச் முறையில் 126 கிலோவும், கிளீன் மற்றும் ஜெர்க் முறையில் 160 கிலோவும் ஆக மொத்தம் 286 கிலோ தூக்கி 2-வது இடத்தை பிடித்தார். வெள்ளிப் பதக்கம் வென்றதன் மூலம் அவர் தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளார்.

பாராட்டுகள்...

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகராட்சிக்கு உட்பட்ட சங்கரலிங்க புரத்தை சேர்ந்த ராஜா முத்துப்பாண்டி காமன்வெல்த் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்றதை தொடர்ந்து அவருக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், முன்னாள் முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலினும், ராஜா முத்துப்பாண்டிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

இந்தியாவுக்குப் பெருமை

#CWG2026-இல் 65 கிலோ பிரிவு பளுதூக்கும் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று இந்தியாவுக்குப் பெருமை சேர்த்துள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த ராஜா முத்துப்பாண்டி அவர்களுக்கு என் பாராட்டுகள்.

தென் தமிழ்நாட்டில் இருந்து உலக அளவில் மேலும் பல சாதனையாளர்கள் புறப்பட்டு வர ராஜா முத்துப்பாண்டி அவர்களின் வெற்றி ஊக்கமளிக்கட்டும்! கல்வியோடு விளையாட்டிலும் நம் இளைஞர்கள் சிறக்கட்டும்! என்று கூறியுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com