இது கன்னி உரை அல்ல.. வன்னி உரை..!- சட்டசபையில் அமைச்சர் வன்னி அரசு பேச்சு

எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலினுக்கு மிகப்பெரிய நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
Minister Vanni Arasu
Published on

சமூகநீதி துறை மானியக்கோரிக்கை விவாதங்கள் மீது அமைச்சர் வன்னி அரசு பதிலளித்தார்.

அப்போது, சட்டசபையில் இன்று நான் பேசுவது கன்னி உரையல்ல, வன்னி உரை என அமைச்சர் வன்னி அரசு தனது உரையை தொடங்கினார்.

அவர் கூறியதாவது:-

என்னை கைது செய்ய வேண்டும் என முழக்கமிடப்பட்ட அதே சபையில் என்னை அமரவைத்து அழகு பார்த்திருக்கிறார் திருமாவளவன்.

விடுதலை புலிகளுக்கு ஆதரவு அளித்ததால் திருமாவளவனை கைது செய், வன்னி அரசுவை கைது செய் என 2007-ல் சட்டசபையில் முழக்கமிட்டனர்.

எனது வெற்றியைவிட வன்னி அரசுவின் வெற்றிதான் முக்கியமானது என எனக்காக தேர்தல் பரப்புரை மேற்கொண்ட உதயநிதிக்கு நன்றி. சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலினுக்கு மிகப்பெரிய நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

தங்கம் தென்னரசு, கனிமொழி, எம்ஆர்கே பன்னீர்செல்வம், எ.வ.வேலு உள்ளிட்ட அத்தனை திமுக உறுப்பினர்களுக்கு நன்றி.

அப்போது, தமிழ்நாட்டின் முக்கிய ஊடகங்கள், பத்திரிகைகளின் பெயர்களை குறிப்பிட்டு சட்டசபையில் வன்னி அரசு நன்றி தெரிவித்தார்.

எனது தேர்தல் வெற்றிக்காக உழைத்த பாமக நிர்வாகிகளுக்கும் எனது நன்றிகள்.

சாதி ஒழிப்பு

சாதி ஒழிப்பு களத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. தமிழீழ விடுதலை களத்தில்.. சாதிய ஒழிப்பு களத்தில்.. என்றோ நான் கொல்லப்பட்டிருக்கலாம்.

தமிழ்த்தேசிய பேரியக்கம் தவெக ஆட்சியில் இடம்பெற்றிருப்பது மிகப்பெரிய வரலாறு. அமைச்சர்கள் மானியக்கோரிக்கை மீது பேசுவார்கள் நாங்கள் பார்த்திருக்கிறோம், இன்று எங்களுக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

கூட்டணியில் வெற்றி கிடைக்கும்போது அது இருதரப்புக்கும் பொருந்தும், நாங்கள் நன்றி கூறிவிட்டோம். ஆனால், எங்களுக்கு யாரும் இதுவரை நன்றி கூறவில்லை.

எதிர்கட்சித் தலைவர் உதயநிதி

திருமாவளவனுக்கும் எனக்கும் இருந்த உறவு அண்ணன் தம்பி போன்ற உறவு. மு.க.ஸ்டாலினுக்கும், திருமாவளவனுக்கும் இடையே இருந்த கூட்டணி தேர்தல் கூட்டணி கிடையாது, அது கொள்கை கூட்டணி.

என்னுடைய அரசியல் ஆசான் திருமாவளவன் என பலமுறை குறிப்பிட்டுள்ளேன். விசிக தலைவர் திருமாவளவனுக்கு நன்றி கூறுகிறேன்.

அமைச்சர் வன்னி அரசு

விசிக தலைவர் திருமாவளவனுக்கு நன்றி கூறுகிறேன் என உதயநிதி கூறியதும் முதன்முறையாக நன்றி கிடைத்துள்ளது.

எங்கள் இலக்கு என்பது சமூகநீதி, சமத்துவம்; அதன் அடிப்படையில் தான் தவெக அமைச்சரவையில் பங்கு பெற்றுள்ளோம்.

தீக்கிரையாக்கப்பட்ட குடிசைகளின் சம்பலில் இருந்து வந்தவன் நான். அமைச்சர் இருக்கையில் என்னை அமர வைத்த திருமா நாளையே அழைத்தாலும் போராட்டக் களத்திற்கு சென்றுவிடுவேன்.

பதவி, பரிசுக்காக நாங்கள் அரசியலுக்கு வரவில்லை. நாங்கள் பதவிக்காக போனோம் என யாரும் சொல்ல முடியாது. பொதுத்தொகுதியில் தலித்தை நிறுத்தவிடமாட்டோம் என்கின்றனர். ஆனால், 234 தொகுதியிலும் போட்டியிட சட்டத்தில் இடமுண்டு.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com