52 கோவில்களில் நாளை முதல் செல்போன்களுக்கு தடை- அமைச்சர் ரமேஷ் பேட்டி

கோவில்களில் புகைப்படம், வீடியோ எடுத்து வலைதளங்களில் வெளியிடப்படும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்றால் அதற்கு பொறுப்பான அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
செல்போன்களுக்கு தடை
செல்போன்களுக்கு தடை
Published on
Summary

பெரிய கோவில்களில் சுமார் 20 ஆயிரம் செல்போன்கள் வைத்திருக்கும் வகையில் பாதுகாப்பு பெட்டக வசதி ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும்.

தமிழ்நாட்டில் உள்ள கோவில்களின் புனிதத் தன்மை மற்றும் ஆன்மிக சூழலை பாதுகாக்கும் வகையில், கோவிலுக்குள் செல்போன் பயன்படுத்துவதற்கு ஏற்கனவே தடை விதிக்கப்பட்டு உள்ளது. ஆனாலும் பல கோவில்களில் பக்தர்கள் செல்போன்கள் மூலம் புகைப்படம், வீடியோ, செல்பி எடுக்கிறார்கள்.

புகார்கள்

மேலும் ரீல்ஸ் உள்ளிட்ட வீடியோக்களை எடுத்து சமூக வலைதளங்களில் பதிவு செய்வதாகவும் இந்து சமய அறநிலையத்துறைக்கு புகார்கள் வந்தன.

இதனால் கோவிலுக்கு வழிபாடு செய்ய வரும் பிற பக்தர்களுக்கு அசவுகரியம் ஏற்படுவதுடன், கோவில்களின் புனிதத்தன்மையும் பாதிக்கப்படுவதாக இந்து சமய அறநிலையத்துறை தெரிவித்தது.

தடை செய்யப்படும்

இதையடுத்து, தமிழகத்தில் உள்ள கோவில் நிர்வாகங்களுக்கு இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி இருந்தார். அதில், ‘செப்டம்பர் 1-ந்தேதி முதல், முதுநிலை திருக்கோவில்களில் பக்தர்கள் செல்போன் கொண்டு செல்வது முழுமையாக தடை செய்யப்படும்.

முக்கிய பிரமுகர்கள் மற்றும் சினிமா பிரபலங்களை கோவிலுக்குள் சென்று வீடியோ அல்லது புகைப்படம் எடுக்க ஊடகங்களுக்கு அனுமதி வழங்குவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். சினிமா பிரபலங்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கோவிலுக்கு வந்தால் ஒரு நாளுக்கு முன்பாகவே தகவல் தெரிவிக்க வேண்டும்’ என்று கூறி இருந்தார்.

அதன்படி தமிழகத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான அனைத்து கோவில்களிலும் நாளை (1-ந்தேதி) முதல் செல்போன்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்படுகிறது.

பாதுகாப்பு பெட்டகம்

கோவிலுக்குள் செல்லும் முன்பு பக்தர்கள் தங்களது செல்போன்களை பாதுகாப்பாக ஒப்படைக்க நுழைவு வாயில் மற்றும் காலணி பாதுகாப்பு மையம் உள்ளிட்ட இடங்களுக்கு அருகில் செல்போன் பாதுகாப்பு பெட்டக வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. ஒவ்வொரு கோவிலிலும் உள்ள வசதிக்கு ஏற்ப இந்த பாதுகாப்பு பெட்டக வசதி அமைக்கப்பட்டு உள்ளது.

பக்தர்களிடம் இருந்து செல்போன்களை பெற்று பாதுகாப்பாக வைத்திருப்பதற்கு ஒரு செல்போனுக்கு ரூ.5 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இதற்கான ரசீதும் வழங்கப்பட உள்ளது. மேலும் கோவில் வளாகத்திற்குள் செல்போன் பயன்பாட்டிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்ற வாசகம் அடங்கிய அறிவிப்பு பலகைகள் கோவில் நுழைவு வாயில் மற்றும் கோவிலுக்கு வெளியில் வைக்கப்பட்டு உள்ளது.

அறிவிப்பு

ஒலிபெருக்கி மூலமாகவும் செல்போன் பயன்பாட்டிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதை பக்தர்களுக்கு அறிவிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. பக்தர்களிடம் இருந்து செல்போன்களை பெற்று பாதுகாப்பாக வைப்பதற்கும், பக்தர்கள் திரும்பி செல்லும்போது அவற்றை ஒப்படைப்பதற்கும் தேவையான பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். கோவில் வளாகத்திற்குள் செல்போன் பயன்படுத்துவது, புகைப்படம் மற்றும் வீடியோ எடுப்பது உள்ளிட்ட செயல்களை கண்காணிக்க போதிய எண்ணிக்கையில் பணியாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். இந்த விதிகளை மீறி புகைப்படம் அல்லது வீடியோ எடுக்கும் பக்தர்கள் மீது போலீசில் புகார் அளித்து உரிய நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

நடவடிக்கை

கோவில்களில் புகைப்படம், வீடியோ எடுத்து வலைதளங்களில் வெளியிடப்படும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்றால் அதற்கு பொறுப்பான அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

மேலும் சினிமா பிரபலங்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் வரும்போது கோவிலுக்குள் வீடியோ அல்லது புகைப்படம் எடுக்க ஊடகங்களுக்கு அனுமதி வழங்குவது முற்றிலும் தவிர்க்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறைகள் அனைத்து கோவில்களிலும் முறையாக அமல்படுத்தப்படுவதை உறுதி செய்யுமாறு செயல் அலுவலர்கள், ஆய்வாளர்கள், அறங்காவலர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு உரிய அறிவுரைகளை மண்டல இணை ஆணையர்கள் வழங்கி உள்ளனர்.

சினிமா பிரபலங்கள்

மேலும் பிரபலங்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் வருகையின் போது பொது பக்தர்களுக்கு எவ்வித அசவுகரியமும் ஏற்படாத வகையிலும், கோவில்களின் புனிதத்தன்மை, மரபு மற்றும் ஒழுங்கு பாதிக்காத வகையிலும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

சினிமா பிரபலங்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கோவிலுக்கு வருகை தருவது தெரியவந்தால், ஒரு நாளுக்கு முன்பாகவோ அல்லது தகவல் கிடைத்த உடனேயோ, அவர்கள் வரவிருக்கும் கோவில், வருகை நேரம், அவர்களுடன் வருபவர்களின் எண்ணிக்கை உள்ளிட்ட முழுமையான விவரங்களை ஆணையர் அலுவலகத்திற்கு கட்டாயம் தெரிவிக்கவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

பெரிய கோவில்

முன்கூட்டியே அனுமதி பெற்றவர்கள் அல்லது பாதுகாப்பு மற்றும் நிர்வாக காரணங்களுக்காக அவசியமான அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் மட்டுமே பிரபலங்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களுடன் செல்ல அனுமதிக்கப்படுவார்கள். இந்த நடைமுறைகள் அனைத்துமே பெரிய கோவில்களில் நாளை முதல் அமலுக்கு வர உள்ளன.

சென்னை வடபழனி முருகன் கோவில், மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவில், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில், திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவில், திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோவில், குன்றத்தூர் முருகன் கோவில், மாங்காடு காமாட்சி அம்மன் கோவில், பெரியபாளையம் பவானி அம்மன் கோவில், வல்லக்கோட்டை முருகன் கோவில், காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில், வரதராஜ பெருமாள் கோவில், ஏகாம்பரநாதர் கோவில், திருவள்ளூர் வீரராகவர் கோவில், திருத்தணி முருகன் கோவில் உள்ளிட்ட கோவில்களில் நாளை முதல் செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்படுகிறது.

திருச்செந்தூர்

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தற்போது இந்த கட்டுப்பாடுகள் நடைமுறையில் உள்ளது. மேலும் திருச்செந்தூர் முருகன் கோவில், பழனி முருகன் கோவில், திருப்பரங்குன்றம் முருகன் கோவில், திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில், சமயபுரம் மாரியம்மன் கோவில், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில், நெல்லையப்பர் கோவில், சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவில், மதுரை அழகர் கோவில், கோவை கோணியம்மன் கோவில், சேலம் கோட்டை மாரியம்மன் கோவில், ராமேசுவரம் ராமநாதசாமி கோவில் உள்ளிட்ட பெரிய கோவில்களில் நாளை முதல் செல்போன்கள் கொண்டு செய்ய தடை விதிக்கப்படுகிறது.

அமைச்சர் ரமேஷ்

கோவில்களுக்குள் செல்போன்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்படுவது குறித்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் இன்று, மாலைமலர் நிருபரிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் உள்ள பெரிய கோவில்களில் நாளை (1-ந்தேதி) முதல் செல்போன்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்படுகிறது. முதல் கட்டமாக தமிழகத்தில் உள்ள 52 கோவில்களில் இந்த நடைமுறை அமல்படுத்தப்பட உள்ளது. இதற்காக கோவில்களில் செல்போன் பாதுகாப்பு பெட்டகம் அமைக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து பொதுமக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளோம்.

தங்கும் அறைகள்

உள்ளூர் பக்தர்கள் தங்கள் வீடுகளிலும், வெளியூர் பக்தர்கள் தாங்கள் தங்கி இருக்கும் விடுதி அறைகளிலும் செல்போன்களை வைத்து விட்டு தரிசனம் செய்ய செல்லலாம். மேலும் கார்கள் உள்ளிட்ட வாகனங்களிலும் செல்போன்களை வைத்து விட்டு கோவிலுக்கு வரலாம்.

அப்படி முடியாத பட்சத்தில் கோவில்களில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு பெட்டகத்தில் செல்போனை கொடுத்து விட்டு செல்லலாம். தரிசனம் முடிந்து வரும்போது அதனை பாதுகாப்பாக பெற்று செல்லலாம்.

செல்போன்களை தாங்கள் தங்கி இருக்கும் அறைகளில் வைத்து விட்டு வருமாறு கூறுவதற்கு முக்கிய காரணம் உள்ளது. உதாரணமாக பெரிய கோவில்களில் சுமார் 20 ஆயிரம் செல்போன்கள் வைத்திருக்கும் வகையில் பாதுகாப்பு பெட்டக வசதி ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும்.

தவிக்க நேரிடும்

திருவிழா காலங்கள் மற்றும் முக்கிய நாட்களில் சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்தால் அவர்கள் செல்போனை வைக்க இடமில்லாமல் தவிக்க நேரிடும். இதனால் கோவிலுக்குள் சென்று தரிசனம் செய்ய முடியாத நிலை ஏற்படும். இதனை தவிர்க்கவே அறைகளிலோ அல்லது கார்களிலோ செல்போன்களை வைக்குமாறு அறிவுறுத்துகிறோம்.

பக்தர்கள் மூலஸ்தானத்தில் உள்ள சாமி சிலை முன்பு ரீல்ஸ் எடுப்பது மற்றும் அதை சமூக வலைத்தளங்களில் பதிவிடுவதை தடுக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கோவில்களில் சினிமா பிரபலங்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் மூலஸ்தானத்தில் சாமி தரிசனம் செய்யும் போது, ஊடகத்தினர் அங்கு வரை சென்று புகைப்படம் எடுக்கிறார்கள். இனி அதற்கும் அனுமதி இல்லை.

எனவே பிரபலங்களை கோவிலுக்கு வெளியே கோபுரம் தெரியும்படி புகைப்படம் எடுத்துக் கொள்ளலாம். கோவில் வளாகத்துக்குள் சென்று புகைப்படம் எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

விழா காலங்கள்

விழா காலங்கள் மற்றும் கோவில்களில் முக்கிய நிகழ்வுகள் நடைபெறும் போது பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகத்தினர் கோவிலுக்குள் சென்று நிகழ்ச்சிகளை புகைப்படம் எடுக்கவும், வீடியோ எடுக்கவும் விதிமுறைகளுக்கு உட்பட்டு அனுமதி வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com