

தமிழ்நாட்டில் மின்தடையை தவிர்க்க, ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.35-க்கு கொள்முதல் செய்ய அரசு முடிவு செய்துள்ளது. மின்சார தேவை அதிகரிப்பு, எல்நினோ மற்றும் காற்றாலை மின்சாரம் குறைவு காரணமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 15 நாட்களுக்கு மட்டும் இந்த மின்சாரம் பயன்படுத்தப்படும் என அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்தார்.
வெளிச்சந்தையில் இருந்து ஒரு யூனிட் மின்சாரம் ரூ.35-க்கு கொள்முதல் செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், கூடுதல் விலைக்கு மின்சாரம் கொள்முதல் தொடர்பாக அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம் அளித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களின் சந்திப்பில் அமைச்சர் நிர்மல்குமார் கூறியதாவது:-
* கடந்தாண்டு 16,800 மெகாவாட் மின்சார தேவை இருந்த நிலையில் தற்போது 21,700 மெகாவாட் தேவை இருக்கிறது.
* தி.மு.க. ஆட்சியில் தமிழ்நாட்டின் மின் உற்பத்தி 50 சதவீதமாக இருந்தது. தற்போது 75 சதவீதமாக அதிகரித்துள்ளோம்.
* எல்நினோ காரணமாக வெப்பம் குறையவே இல்லை, அதனால் மின்சார தேவை அதிகரித்துள்ளது.
* தமிழ்நாட்டிற்கு மட்டும் இந்த நிலையல்ல பிற மாநிலங்களிலும் மின்சார தேவை அதிகரித்துள்ளது.
* பீக் ஹவர்ஸில் தேவையை பூர்த்தி செய்ய ஒரு யூனிட் ரூ.35-க்கு மின்சாரம் வாங்க டெண்டர் கோரியுள்ளோம்.
* மத்திய தொகுப்பில் மின்சாரம் கிடைக்காததால் அதிக விலைக்கு வாங்க வேண்டிய நிலை உள்ளது.
* காற்றின் வேகம் குறைந்துள்ளதால் காற்றாலை மின்சாரமும் குறைந்த நிலையில் அதிக மின்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
* காற்றாலை மூலம் 3000 மெகாவாட் வரை மின்சாரம் தமிழ்நாட்டுக்கு கிடைக்கவில்லை.
* கேஸ் பவர் மட்டுமே ஒரு யூனிட் ரூ.35-க்கு கிடைக்கும், நாப்தா பவர் ஒரு யூனிட் ரூ.45-க்கு கிடைக்கும்.
* அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்கவில்லை எனில் 2 அல்லது 3 மணி நேரம் மின்வெட்டு ஏற்படும். பிற மாநிலங்களைப் போல கூடுதல் மின்தடை ஏற்படும்.
* 3500 மெகாவாட் மின்சாரத்திற்கு டெண்டர் வெளியிட்டாலும் 1500 மெகாவாட் மட்டுமே வாங்க உள்ளோம்.
* தமிழ்நாட்டில் மின்தடையை தவிர்க்கவே கூடுதல் விலைக்கு மின்சாரம் கொள்முதல் செய்யப்படுகிறது.
* மின்சாரம் வாங்க கொள்முதல் போட்டுவிட்டால் இடையில் ரத்து செய்ய முடியாது.
* அக். 15 முதல் அக்.31 வரையிலான காலகட்டத்திற்கு மட்டுமே இந்த மின்சாரம் பயன்படுத்தப்படும்.
* ரூ.35-க்கு மின்சாரம் கொள்முதல் செய்வதன் மூலம் தினமும் ரூ.5 கோடி கூடுதல் செலவு ஏற்படும்.
* ரூ.5 கோடி கூடுதலாக செலவழித்து 15 நாட்களுக்கு மின்சாரம் கொள்முதல் செய்தால் மின்தடை ஏற்படாது.
* வாங்கும் மின்சாரத்தை மாலை 6 மணி முதல் இரவு 12 மணி வரை மட்டும்தான் பயன்படுத்துவோம்.
* 1500 முதல் 2000 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்யும் வகையில் 5 ஆண்டு ஒப்பந்தம் விரைவில் போடப்படும். கூடுதலாக மின்சாரத்தை கொள்முதல் செய்ய நீண்ட கால ஒப்பந்தம் போடப்பட உள்ளது.
* 15 நாட்கள் மின்சார தட்டுப்பாடு ஏற்படும், அதனை தடுக்கவே குறுகிய கால டெண்டர் கோரப்பட்டுள்ளது.
* ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.35-க்கு கொள்முதல் செய்வது தற்காலிக நடவடிக்கை தான் என்றார்.