மின்வெட்டு, கைதிகள் தப்பி ஓடிய விவகாரம்: வலுக்கும் எதிர்ப்பு- அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்

குடியரசு துணைத் தலைவர் தமிழர் ஒருவர் பிரதமராக முடியும் என்று எந்த நோக்கத்தில் கூறினார் என்பது தெரியவில்லை.
அமைச்சர் நிர்மல்குமார்
Published on: 
Summary

மின்வெட்டு மற்றும் கைதிகள் தப்பியோடிய சம்பவங்கள் தொடர்பாக எதிர்ப்பு வலுத்த நிலையில், அமைச்சர் நிர்மல்குமார் மின்தடை காரணங்களை விளக்கினார். மின்சார விநியோகத்தில் உள்ள சவால்களை சமாளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், சிறைத்துறையில் காலியிடங்களை நிரப்ப திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

புழல், தேனி சிறையில் இருந்து கைதிகள் தப்பியோடிய சம்பவத்தை தொடர்ந்து கோவை மத்திய சிறையில் இருந்தும் கைதி தப்பி ஓடி உள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் தமிழ்நாட்டில் மின் வெட்டு பிரச்சனையும் நிகழ்வதால் தார்மீகப் பொறுப்பேற்று சட்டத்துறை மற்றும் மின்சாரத்துறை அமைச்சருமான நிர்மல் குமார் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

இந்த நிலையில், மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் நிர்மல்குமார் கூறியதாவது:-

மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் துணைக் குடியரசுத் தலைவர் வருகையை முன்னிட்டு பராமரிப்புப் பணிகள் விரிவாக மேற்கொள்ளப்பட்டன. இதற்காக ஜெனரேட்டர் மூலம் மின்சாரம் வழங்கப்பட்டது. துணைக் குடியரசுத் தலைவர் கோவிலில் இருந்து புறப்பட்டுச் சென்றுவிட்டதாகக் கூறி ஜெனரேட்டரின் மின்சார இணைப்பு தவறுதலாக அணைக்கப்பட்டுள்ளது. இதனால் மின்தடை ஏற்பட்டது. இந்தச் சம்பவம் தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளோம். முன்னாள் முதலமைச்சர்கள் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமிக்கு வழங்கப்படும் பாதுகாப்பில் எந்த குறைபாடும் இல்லை. இதில் எந்தவிதமான கட்டுப்பாடுகளும் விதிக்கப்படவில்லை.

பணியிடங்கள் நிரப்ப நடவடிக்கை

மின்சார விநியோகத்தில் எங்கெல்லாம் பிரச்சனைகள் உள்ளனவோ அவற்றைக் கண்டறிந்து சரிசெய்து வருகிறோம். மின்சாரத்துறை என்பது தினசரி செயல்பாடுகளைக் கொண்ட, அதிக சவால்கள் நிறைந்த துறையாகும். எங்கெல்லாம் மின்தடை ஏற்படுகிறதோ, அங்கெல்லாம் உடனடியாகப் பிரச்சனைகளைச் சரிசெய்ய நடவடிக்கை எடுத்து வருகிறோம். குடியரசு துணைத் தலைவர் தமிழர் ஒருவர் பிரதமராக முடியும் என்று எந்த நோக்கத்தில் கூறினார் என்பது தெரியவில்லை.

கடந்த ஆட்சிக் காலத்தில் மின்னகம் என்ன செய்து கொண்டிருந்தது என்பது அனைவருக்கும் தெரியும். மின்சாரத்துறையில் எங்கெல்லாம் ஊழல் நடைபெற்றுள்ளதோ, அவற்றைத் தடுத்து நிறுத்தியுள்ளோம். எங்கெல்லாம் தவறுகள் உள்ளனவோ அவற்றைச் சரிசெய்து வருகிறோம். ஆனால் மின்தடை தொடர்பாக ஒரு தவறான பிம்பத்தை உருவாக்க முயற்சி நடைபெறுகிறது. சிறைத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, 16 கிளைச் சிறைகளில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

X