

பொதுமக்களுக்கு தரமான நுகர்வுப் பொருட்கள் நியாயமான விலையில் எளிதாக கிடைப்பதையும் உறுதி செய்ய வேண்டும் என அமைச்சர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
நுகர்வோர் கூட்டுறவு நிறுவனங்களுக்கான பழைய கூட்டு கொள்முதல் குழு முறை கலைக்கப்பட்டு, கூட்டுறவு நிறுவனங்களுக்கு தேவையான நுகர்வுப் பொருட்களை வெளிப்படைத்தன்மையுடன், தரமாகவும் நியாயமான விலையிலும் கொள்முதல் செய்வதற்காக புதிய இணையவழி கொள்முதல் முறை அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இப்புதிய கொள்முதல் நடைமுறைகள் குறித்து கூட்டுறவுத் துறை அமைச்சர்காந்திராஜன் இன்று தலைமைச் செயலகத்தில் ஆய்வு மேற்கொண்டார்.
இணையவழி கொள்முதல் முறையின் செயல் முறை, வழங்குநர் பதிவு, விலை நிர்ணயம், தரப் பரிசோதனை மற்றும் பொருட்கள் கூட்டுறவு விற்பனை நிலையங்களுக்கு விநியோகிக்கப்படும் நடைமுறைகள் குறித்து விரிவாக பரிசீலிக்கப்பட்டது. இம்முறையை மேலும் பயனுள்ளதாக செயல்படுத்த தேவையான பல்வேறு அறிவுரைகளை அவர் அதிகாரிகளுக்கு வழங்கினார்.
மாநிலம் முழுவதும் உற்பத்தியாளர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட வழங்குநர்களை அடையாளம் கண்டு, அவர்களுக்கு புதிய இணையவழி கொள்முதல் முறை, வழங்குநர் பதிவு மற்றும் இணையதள பயன்பாடு தொடர்பாக பல கட்ட பயிற்சிகள் வழங்கி, அதிக எண்ணிக்கையிலான வழங்குநர்களை இம்முறையில் இணைக்க நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டது. பொதுமக்களுக்கு தரமான நுகர்வுப் பொருட்கள் நியாயமான விலையில் எளிதாக கிடைப்பதையும் உறுதி செய்ய வேண்டும் என அமைச்சர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இந்நிகழ்வில் கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர், கூடுதல் பதிவாளர் மேலாண்மை இயக்குநர் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.