

கோவையில் நடைபெற்ற 2-வது மண்டல மாநாட்டில், 11 மாவட்ட அதிகாரிகளுடன் அமைச்சர் என். ஆனந்த் ஆலோசனை நடத்தினார். ஊரக வளர்ச்சி திட்டங்கள், வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் கோவை கொடிசியா வளாகத்தில் “வெற்றித் தமிழகம் – தொலைநோக்கு ஆவணம்” செயல்திட்ட முன்னெடுப்பு மற்றும் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள் தொடர்பான இரண்டாவது மண்டல மாநாடு நடந்தது. மாநாட்டுக்கு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் என்.ஆனந்த் தலைமை தாங்கினார்.
மாநாட்டில் கோவை, தருமபுரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, நாமக்கல், சேலம், நீலகிரி, திருப்பூர், திண்டுக்கல், கரூர் மற்றும் திருச்சி ஆகிய 11 மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஊரக வளர்ச்சி பணிகள், “வெற்றித் தமிழகம் தொலைநோக்கு ஆவணம்” செயல்திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் மற்றும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் என்.ஆனந்த் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுடன் விரிவாக ஆய்வு மேற்கொண்டார்.
மாநாட்டில் அமைச்சர் என். ஆனந்த் பேசியதாவது:-
வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு, சம்பந்தப்பட்ட 11 மாவட்டங்களிலும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முழுமையாக மேற்கொள்ள வேண்டும். தாழ்வான பகுதிகள், நீர்நிலைகள், கால்வாய்கள் மற்றும் மழைநீர் வடிகால்களை தொடர்ந்து கண்காணித்து, மழைநீர் சீராக வெளியேறுவதற்கு தேவையான பராமரிப்பு மற்றும் தூர்வாரும் பணிகளை மேற்கொண்டு தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
மழைக்காலங்களில் சாலைகள் சேதமடைவதைத் தடுக்கும் வகையில் சாலைப் பராமரிப்புப் பணிகளை உரிய முறையில் மேற்கொள்ள வேண்டும்.
சேதமடைந்த சாலைகளை உடனடியாக சீரமைக்க வேண்டும். அதேபோல், பொதுமக்களுக்கு பாதுகாப்பான மற்றும் தரமான குடிநீர் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்வதுடன், குடிநீர் விநியோகம் தொடர்பான புகார்களுக்கு உடனுக்குடன் தீர்வு காண வேண்டும். வடகிழக்கு பருவமழையால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை தவிர்க்கும் வகையில், அனைத்துத் துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். அவசரகால நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்வதற்கு தேவையான ஏற்பாடுகளை முன்கூட்டியே செய்து வைத்திருக்க வேண்டும்.
தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின் படி, பொதுமக்களின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளித்து, மழைக்காலங்களில் ஏற்படும் பாதிப்புகளுக்கு உடனடியாகத் தீர்வு காணும் வகையில் அதிகாரிகள் தொடர்ந்து கண்காணிப்புடன் செயல்பட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.