

போலீசார் சுமார் 3 கிலோமீட்டர் தூரம் துரத்திச் சென்று பாறமடை பகுதியில் 2 வேன்களையும் மடக்கினர். இதனை தொடர்ந்து வேன்களை நிறுத்திவிட்டு டிரைவர்கள் தப்பியோடி விட்டனர். போலீசார் அந்த டெம்போக்களை சோதனை செய்தபோது, அதில் கனிம வளம் ஏற்றிச் செல்லப்பட்டது தெரியவந்தது.
தமிழக அரசின் கனிம வளக் கடத்தல் தடை உத்தரவை முழுமையாக அமல்படுத்தும் வகையில், கன்னியாகுமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அன்சுல் நாகர் உத்தரவின் பேரில், மாவட்ட எல்லைப் பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பு மற்றும் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், குமரி மாவட்டம் பளுகல் அருகே மலையடி பகுதியில் இருந்து கேரளாவிற்கு கனிம வளம் கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அப்பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு வந்த 2 டெம்போக்களை போலீசார் நிறுத்தும்படி சைகை காட்டினர். ஆனால், வேன்கள் நிற்காமல் வேகமாக சென்றன.
இதையடுத்து போலீசார் சுமார் 3 கிலோமீட்டர் தூரம் துரத்திச் சென்று பாறமடை பகுதியில் 2 வேன்களையும் மடக்கினர். இதனை தொடர்ந்து வேன்களை நிறுத்திவிட்டு டிரைவர்கள் தப்பியோடி விட்டனர். போலீசார் அந்த டெம்போக்களை சோதனை செய்தபோது, அதில் கனிம வளம் ஏற்றிச் செல்லப்பட்டது தெரியவந்தது. அதனை மருதங்கோடு பகுதிக்கு கொண்டு செல்ல அனுமதி சீட்டு பெறப்பட்டிருந்த நிலையில், அங்கு செல்லாமல் வேறு வழித்தடம் வழியாக கேரளாவிற்கு கடத்த முயன்றது தெரியவந்தது.
இதையடுத்து 2 டெம் போக்களையும் பறிமுதல் செய்த போலீசார், அதன் டிரைவர்களான பளுகலைச் சேர்ந்த அகஸ்டின் மற்றும் ராமவர்மன் சிறை பகுதியைச் சேர்ந்த ஷிபு ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து துணை சூப்பிரண்டு சங்கர் கணேஷ் மேற்பார்வையில் சப்-இன்ஸ்பெக்டர் மகேந்த் தலைமையிலான போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இந்த நிலையில் கேரள மாநிலம் வெள்ளறடை பகுதியில் அகஸ்டின் பதுங்கியிருந்தது தெரியவர, அங்கு சென்ற போலீசார் இன்று அதிகாலை அவரை கைது செய்தனர். மற்றொரு டிரைவர் ஷிபுவை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
களியக்காவிளை சோதனை சாவடியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது, தார்ப்பாய் மூலம் மூடப்பட்ட நிலையில் டாரஸ் லாரி ஒன்று வந்தது. அந்த லாரியை சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் நிறுத்தினர். அப்போது லாரியை நிறுத்திவிட்டு டிரைவர் தப்பி ஓட முயன்றார். ஆனால் போலீசார் அவரை மடக்கி பிடித்தனர். தொடர்ந்து லாரியை சோதனை செய்த போது, அதில் கேரளாவுக்கு கனிம வளம் கடத்திச் செல்வது தெரியவந்தது. இதையடுத்து லாரியை பறிமுதல் செய்த போலீசார், டிரைவரை கைது செய்தனர்.
விசாரணையில், அவர் சிதறால் பகுதியைச் சேர்ந்த சிபின் என்பது தெரியவந்தது. கனிம வளம் எங்கிருந்து கொண்டு வரப்பட்டது? எங்கு கொண்டு செல்லப்பட இருந்தது? இதன் பின்னணியில் யார் உள்ளனர்? என்பது குறித்து போலீசார் சிபினிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.