சுசீந்திரம் குளத்தில் குவியும் வெளிநாட்டுப் பறவைகள்

சாமிதோப்பு, ராஜக்கமங்கலம், புத்தளம் பகுதிகளில் உள்ள உப்பளங்களிலும் பறவைகளின் வரத்து தொடர் உயர்வைக் கண்டுள்ளது.
சுசீந்திரம் குளத்தில் குவியும் வெளிநாட்டுப் பறவைகள்
Published on: 
Summary

பட்டைத்தலை வாத்து சைபீரியா, மங்கோலியா மற்றும் திபெத் பகுதிகளிலிருந்து இமயமலையைத் தாண்டி அதிக உயரத்தில் பறந்து வருகிறது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் பனிக்காலம் மற்றும் வடகிழக்கு பருவமழைத் தொடக்கத்தை முன்னிட்டு, நாட்டின் பல்வேறு மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்து ஏராளமான இடம்பெயரும் பறவைகள் வருகை தருவது வழக்கமாகும்.

தற்போது குளிர்கால சீசன் தொடங்கியுள்ள நிலையில், குமரி மாவட்டத்தின் முக்கிய நீர்நிலைகளில் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டுப் பறவைகளின் வருகை கணிசமாக அதிகரித்துள்ளது.

பொதுமக்கள்

சுசீந்திரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள நீர்நிலைப் பகுதிகளில் அமைந்துள்ள பெரிய குளத்தின் நடுவே உள்ள மரங்களில், தினமும் மாலை வேளையில் ஆயிரக்கணக்கான பறவைகள் அடைவதற்காகச் சூழ்ந்து வருகின்றன. நேற்று மாலை வேளையில், பல்வேறு வெளிநாட்டு, உள்நாட்டுப் பறவையினங்கள் ஒரே நேரத்தில் குளத்தைச் சுற்றி வந்து மரங்களில் அடைந்தன. இந்த அழகிய காட்சியைக் கண்டு, அவ்வழியாகச் சென்ற பொதுமக்கள் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களை நிறுத்தி வியப்புடன் பார்த்துச் சென்றனர்.

ஐரோப்பிய நாடுகள்

இதேபோன்று சாமிதோப்பு, ராஜக்கமங்கலம், புத்தளம் பகுதிகளில் உள்ள உப்பளங்களிலும் பறவைகளின் வரத்து தொடர் உயர்வைக் கண்டுள்ளது. சைபீரியா, ஐரோப்பிய நாடுகள், இமயமலைப் பகுதிகள் மற்றும் மத்திய ஆசிய நாடுகளிலிருந்து ஆயிரக்கணக்கான மைல்கள் கடந்து பறவைகள் இங்கு வருகின்றன. பட்டைத்தலை வாத்து சைபீரியா, மங்கோலியா மற்றும் திபெத் பகுதிகளிலிருந்து இமயமலையைத் தாண்டி அதிக உயரத்தில் பறந்து வருகிறது.

சக்கரவாத்து

பூநாரை ரஷியா, ஈரான் மற்றும் கசகஸ்தான் நாடுகளிலிருந்து வருகை தரும் இவை நீளமான கால்களும் இளஞ்சிவப்பு நிற இறகுகளும் கொண்டவை. ஊசிவால் வாத்து ஆர்க்டிக் பகுதிகள் மற்றும் ஐரோப்பாவிலிருந்து வந்து குளங்களில் கூட்டமாக நீந்தி இரையெடுக்கின்றன.

சக்கரவாத்து ஐரோப்பாவிலிருந்து வரும் சிறிய வகை வேகமான வாத்துக்கள் சுசீந்திரம் பகுதியில் அதிகளவில் தென்படுகின்றன.

இலங்கை

வர்ண நாரை_சங்குவளை நாரை இலங்கை மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளிலிருந்து கூடுகட்டி இனப்பெருக்கம் செய்ய வருகின்றன. கரண்டிவாயன் கரண்டி போன்ற அலகைக் கொண்டு நீரில் இரையைத் தேடும் இவை மத்திய ஆசியாவிலிருந்து வருகின்றன.

சுசீந்திரம் - தேரூர் - வேம்பனூர் நீர்நிலைகள் சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த "ராம்சார் தலங்களாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன. அக்டோபர் முதல் மார்ச் மாதம் வரை இங்கு தங்கும் இந்தப் பறவைகள், ஏப்ரல் மாதத் தொடக்கத்தில் இனப்பெருக்கக் காலம் முடிந்து மீண்டும் தங்களது சொந்த நாடுகளுக்குத் திரும்பிச் செல்லும்.

வனத்துறை

இப்பகுதிகளில் பறவைகளுக்கு இடையூறு இல்லாத சூழலை உருவாக்கவும், வேட்டையாடுதலைத் தடுக்கவும் வனத்துறை மற்றும் உள்ளூர் சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து தீவிர கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

X