மேட்டூர் அணையின் நீர்வரத்து 8,618 கன அடியாக உயர்வு - ஒகேனக்கல்லில் 3-வது நாளாக பரிசல் இயக்க தடை!

தற்போது நீர் மட்டம் 88.21 அடியாகவும், நீர் இருப்பு 50.63 டி.எம்.சி.யாகவும் உள்ளது.
Mettur Dam
Published on
Summary

கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாகவும், கே.ஆர்.எஸ். மற்றும் கபினி அணைகளில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டுள்ளதாலும் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கி உள்ளது.

ஒகேனக்கல்லில் பரிசல் தடை

ஒகேனக்கல்லில் நேற்று முன்தினம் காலை 8 மணிக்கு வினாடிக்கு 4,000 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை 6 மணிக்கு 8,000 கன அடியாக அதிகரித்தது.

இன்று சற்று குறைந்து வினாடிக்கு 7000 கன அடி தண்ணீர் ஒகேனக்கல்லில் வந்து கொண்டிருக்கிறது. அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ஒகேனக்கல் காவிரி ஆற்றில் பரிசல் இயக்க தருமபுரி மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.

இந்த தடை தொடர்ந்து 3-வது நாளாக அமலில் உள்ளது.

தொடர்ந்து நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேட்டூர் அணை

இந்த தண்ணீர் நேராக மேட்டூர் அணைக்கு வருகிறது. நேற்று முன்தினம் நீர்வரத்து வினாடிக்கு 2,495 கன அடியாக இருந்தது. நேற்று காலை நீர்வரத்து வினாடிக்கு 5,227 கன அடியாகவும், மாலையில் 7,598 கன அடியாகவும் அதிகரித்தது.

இன்று காலை 8 மணி நிலவரப்படி நீர்வரத்து வினாடிக்கு 8,618 கன அடியாக அதிகரித்து தண்ணீர் அணைக்கு வந்துக்கொண்டு இருக்கிறது. நீர் மட்டம் 88.21 அடியாகவும், நீர் இருப்பு 50.63 டி.எம்.சி.யாகவும் உள்ளது.

அணையிலிருந்து காவிரி டெல்டா பாசன சம்பா சாகுபடிக்கு வினாடிக்கு 12,000 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. அதுபோல் கிழக்கு- மேற்கு கால்வாய் வழியாக வினாடிக்கு 400 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.

சுற்றுலா பயணிகள் குவிந்தனர்

விடுமுறை நாளான இன்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஒகேனக்கல்லில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் ஒகேனக்கல்லில் உள்ள அருவிகளில் குளித்து மகிழ்ந்தனர்.

மேலும் காவிரி ஆற்றின் கரையோர பகுதியில் நின்றும் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்தனர். புகைப்படம், செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

இதேபோல் மேட்டூர் அணையை காண பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் மேட்டூருக்கு வருகை தந்தனர். அவர்கள் அணையை சுற்றி பார்த்து விட்டு அருகாமையில் உள்ள அணை பூங்காவில் ஊஞ்சல், சறுக்கு உள்ளிட்டவைகளில் விளையாடி மகிழ்ந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com