

பங்க் லீஸ்க்கு எடுத்த விவகாரத்தில் மனோன்மணிக்கும், சேகருக்கும் இடையே கொடுக்கல் வாங்கலில் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதியை சேர்ந்தவர் சேகர். இவர் அரசு ஒப்பந்ததாரர். கோவை, நீலகிரி, திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அரசு கட்டுமான பணிகளை எடுத்து செய்து வருகிறார். இவர் மேட்டுப்பாளையம் அன்னூர் சாலையில் நால்ரோடு பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கோவையை சேர்ந்த கால்நடை மருத்துவர் சுரேஷ் மற்றும் இவரது மனைவி மனோன்மணி என்பவரிடம் இருந்து லீஸ்க்கு எடுத்து நடத்தி வந்துள்ளார்.
இந்நிலையில் இந்த பங்க் லீஸ்க்கு எடுத்த விவகாரத்தில் மனோன்மணிக்கும், சேகருக்கும் இடையே கொடுக்கல் வாங்கலில் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் மனோன்மணி மீது சேகர் செக் மோசடி வழக்கு தொடுத்துள்ளார்.இதில் நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி மனோன்மணி தற்போது கோவை சிறையில் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் சேகர் இந்த பங்கில் வேறு யாரும் உரிமை கொண்டாடகூடாது என்பதற்காக பங்கில் தன்னிடம் 10 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து வந்த மேட்டுப்பாளையம் டேன் இந்திய காலனி எல்.எஸ்.புரம் பாக்குகார வீதியை சேர்ந்தவர் வினோத் பாலாஜி (44) என்பவரை கவனித்து வரும்படி கூறியுள்ளார். வினோத் பாலாஜி இந்த பெட்ரோல் பங்கையும் சேகரின் மற்ற அரசு பணிகளையும் மேற்கொண்டு வருகிறார். இதற்காக அரசு ஒப்பந்த பணிகளை செய்து வரும் கூலி தொழிலாளர்களை தற்காலிகமாக பெட்ரோல் பங்க் பின்புறம் தனியாக அறை எடுத்து தங்க வைத்து கவனித்து வந்துள்ளார்.
பெட்ரோல் பங்கை இரவு வினோத் பாலாஜியும், பகலில் பெள்ளாதி பகுதியை சேர்ந்த நட்ராஜ் மனைவி வசந்தி (36) என்பவரும் கவனித்து வந்துள்ளனர். இந்நிலையில் நேற்று இரவு பெட்ரோல் பங்கில் ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த சபான் (26), ஆபி ஜூல் (29), சவுக்கத் அலி (48) மற்றும் சேகரின் நிறுவனத்தில் குன்னூர் கோத்தகிரி சாலையில் சாலை பணிகளை மேற்கொண்டு வந்த நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கரிக்கையூர் பகுதியை சேர்ந்த தியாகராஜ் (28), அருண் (25), சிவக்குமார் (45), செல்வகுமார் (42), ரங்கசாமி (48) ஆகியோர் பெட்ரோல் பங்கில் பின்புறம் உள்ள அறையில் சமைத்து சாப்பிட்டு இருந்துள்ளனர். நேற்று இரவு 10.30 மணி அளவில் இவர்களிடம் வினோத் பாலாஜி என்ன சமைத்துள்ளீர்கள் என்று கேட்டு அவர்களிடம் தனக்கு உணவு கொடுத்து அனுப்புமாறு கூறியுள்ளார். இதையடுத்து அவர்கள் இவருக்கு தனியாக ஒரு தட்டில் ஒரு முட்டையுடன் சேர்த்து உணவை கொடுத்து அனுப்பியுள்ளனர்.
அதன்பின் கோத்திகிரியில் இருந்து வந்த இவர்கள் 5 பேரும் அறைக்குள் படுத்து தூங்கி உள்ளனர். வினோத் பாலாஜியுடன் சபான், ஆபிஜூல், சவுக்கத் அலி ஆகியோர் பெட்ரோல் பங்க் வளாகத்தில் தங்கி உள்ளனர். இதில் வினோத் பாலாஜியின் காரில் ஷபான் தூங்கி உள்ளார். சவுக்கத் அலி, வினோத் பாலாஜி படுத்து உறங்கும் கட்டிலின் அருகே படுத்து தூங்கி உள்ளார். அபிஜூல் பெட்ரோல் பங்கின் முன்புறம் தங்கி உள்ளார்.
இந்நிலையில் இன்று காலை சுமார் 5 மணிக்கு சபான், சவுக்கத் அலி, அபிஜூல் ஆகியோர் எழுந்த போது கட்டிலில் வினோத் பாலாஜி கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்துடன் உயிரிழந்த நிலையில் காணப்பட்டார். இதனை பார்த்த இவர்கள் மூவரும் பெட்ரோல் பங்கின் பின்புறம் சென்று அங்கு தங்கியிருந்தவர்களிடம் கூறியுள்ளனர். இதையடுத்து இவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
அதன்பேரில் சம்பவ இடத்திற்கு மேட்டுப்பாளையம் போலீஸ் டி.எஸ்.பி.பாலாஜி, போலீஸ் இன்ஸ்பெக்டர் ஞானசேகரன், சப்-இன்ஸ்பெக்டர்கள் முருகராஜா, ஹைதர் அலி, சுரேந்தர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இறந்து கிடந்த வினோத் பாலாஜி உடலை கைப்பற்றி மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு தடயவியல் நிபுணர்கள், மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டது. மோப்பநாய் பெட்ரோல் பங்க் இன் பின்புறம் உள்ள பகுதிகளில் சென்று மோப்பம் பிடித்து சிறுது தூரம் ஓடி நின்றது. தற்போது இது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.