

மேல்மா சிப்காட் தொழிற்பூங்கா விரிவாக்கத்திற்கான நில எடுப்பு அறிவிக்கையை தமிழ்நாடு அரசு திரும்பப் பெற்றது.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே சிப்காட் தொழிற்பேட்டை 3-வது யூனிட் விரிவாக்கத்துக்காக, மேல்மா உட்பட 11 கிராமங்களில் சுமார் 3 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்களை முந்தைய திமுக அரசு கையகப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டது.
மேல்மா சிப்காட் எதிர்ப்பு விவசாயிகள் இயக்கம் சார்பில் தொடர் போராட்டங்கள் நடைபெற்றன. அவர்களுக்கு தவெக ஆதரவு தெரிவித்தது.
2025 ஜூலை மாதம் நடந்த தவெக செயற்குழு கூட்டத்தில் மேல்மா சிப்காட் விரிவாக்கத் திட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும் எனத் தீர்மானம் நிறைவேற்றியிருந்தது.
ஆனால் ஆட்சி பொறுப்பேற்ற பின் தவெக அரசு, மேல்மா கிராமத்தில் 22 எக்டேர் புன்செய் நிலம் கையகப்படுத்துவதற்கான அறிவிக்கை வெளியிட்டது விமர்சனத்துக்கு உள்ளானது.
கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில் தற்போது தவெக அரசு அதிலிருந்து பின்வாங்கியுள்ளது.
நேற்று நள்ளிரவு வெளியிடப்பட்ட அரசிதழில், "சிப்காட் செய்யார் தொழிற்பூங்கா நிலை-3 க்காக திருவண்ணாமலை மாவட்டம்,செய்யார் வட்டம், மேல்மா கிராமத்தில் அலகு 1 பிளாக் 2-ல் 22.16.00 ஹெக்டேர் நிலங்களை நில எடுப்பு செய்ய, தமிழ்நாடு தொழிலியல் நோக்கங்களுக்கான நில எடுப்பு சட்டப் பிரிவு 3(1)ன் கீழ் அறிவிக்கை வெளியிடப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்ட கலெக்டரின் பரிந்துரையின் அடிப்படையில் அந்த அரசிதழில் உள்ள 22.16.00 ஹெக்டேர் நிலங்களை நில எடுப்பு செய்ய வெளியிடப்பட்டுள்ள அறிவிக்கை திரும்பப் பெறப்படுகிறது." என குறிப்பிடப்பட்டுள்ளது.