

மேகதாது அணையை கட்டியே தீருவோம் என கர்நாடக மாநில முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் எல்லா இடங்களிலும் பேசி வருகிறார். ஆனால் தமிழ்நாடு அனுமதி இல்லாமல் ஒரு செங்கலை கூட கர்நாடகா அரசு எடுத்து வைக்க முடியாது என்று தமிழக அரசியல் தலைவர்கள் கூறி வருகிறார்கள்.
அதேவேளையில் ஒன்றாக இணைந்து கர்நாடக அரசுக்கு எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டும். இதனால் அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்ட வலியுறுத்தி முன்னாள் முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின், முதலமைச்சர் விஜய்க்கு கடிதம் எழுதியிருந்தார்.
இந்த நிலையில் சோனியா காந்தியின் சுயசரிதை புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள முதலமைச்சர் விஜய் உடன் அமைச்சர்கள் என் ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, ராஜ்மோகன் சென்றிருந்தார்.
பின்னர் அமைச்சர்கள் என். ஆனந்த் மற்றும் ஆதவ் அர்ஜூனா ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது அமைச்சர் என். ஆனந்த் கூறியதாவது:-
மேகதாது அணை விவகாரத்தை சட்டரீதியாக சந்திப்பதாக தெரிவித்தோம். இந்த விவகாரத்தில் தமிழ்நாட்டின் உரிமையை விட்டுக்கெடுக்கமாட்டோம் என்று வலியுறுத்தினோம். எங்களுடைய கருத்துகளை கவனமாக கேட்டுக்கொண்டார். முழு ஒத்துழைப்பை தருவார் என்று நம்புகிறோம்.
இவ்வாறு என். ஆனந்த் தெரிவித்தார்.
அமைச்சர் ஆதவ் அர்ஜூனா கூறியதாவது:-
தமிழ்நாட்டு முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி மத்திய அமைச்சரை சந்தித்தோம். காவிரி விவகாரத்தில் 2018-ன் உச்சநீதிமன்ற தீர்ப்புதான் இறுதியானது என்பதை வலியுறுத்தினோம். உச்சநீதிமன்ற தீர்ப்பை மீறி அரசாங்கம் மற்றும் எந்தவொரு அமைப்புகளும் எந்த முடிவும் எடுக்க முடியாது என்பதை வலியுறுத்தினோம். அந்த தீர்ப்பு தமிழ்நாடு, கேரளா மற்றும் புதுச்சேரி மாநிலங்களுக்கு ஆதரவாக வழங்கப்பட்டது.
உச்சநீதிமன்ற தீர்ப்பு எதிராக மேகதாது அணை பிரச்சினையை கர்நாடக அரசு உருவாக்கி இருக்கிறது என்று வலியுறுத்தினோம். விரிவான திட்ட அறிக்கை உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது என பதிவு செய்துள்ளோம்.
விரிவான திட்ட அறிக்கை சார்பாக தமிழக அரசை பரிசீலனை செய்யாமல் எந்த முடிவும் எடுக்கக் கூடாது என்றும் பதிவு செய்தோம். மத்திய அமைச்சர் சட்டப்பூர்வமான அணுகுமுறையை மிகவும் கூர்ந்து கவனித்தார். விரிவான திட்ட அறிக்கை தொடர்பாக எந்த முடிவும் எடுக்கவில்லை என்று கூறியிருக்கிறார். மத்திய அமைச்சருடனான பேச்சுவார்த்தை பாசிட்டிவாக இருந்தது.
இவ்வாறு அமைச்சர் ஆதவ் அர்ஜூனா தெரிவித்தார்.