மேகதாது விவகாரம்: தி.மு.க ஆட்சியில் மூன்று முறை மனுக்கள் தள்ளுபடி குறித்து ஆதவ் கேள்வி - கே.என். நேரு பதில்

அவர்கள் ஏன் மூன்று முறை தோற்றார்கள் என கூற வேண்டும்
ஆதவ், நேரு
ஆதவ், நேரு
Published on

சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இன்றைய கூட்டம் தொடங்கிய நிலையில் மேகதாது அணை குறித்தும், காவிரி குருவை சாகுபடி பாதிப்பு குறித்தும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி உட்பட பல உறுப்பினர்கள் கவன ஈர்ப்பு தீர்மானம் தந்தனர். அதை சபாநாயகர் பிரபாகர் ஏற்றுக்கொண்டார்.

ஆதவ் அர்ஜுனா

இதன் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இதில் விளையாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசுகையில்,

"எதிர்க்கட்சி தலைவர் அவரின் உரையில் ஒரு தவறான தகவலை கொடுத்தார்.

பிரதமருக்கு ஒரு முறை மட்டும் தான் கடிதம் எழுதியதாக கூற, எதிர் தரப்பினர், இரண்டு முறை கூறினார் என கூச்சலிட திருத்திக்கொண்ட ஆதவ், முதல் முறை ஒரு முறை என்று சொல்லிவிட்டு பின்னர் இரண்டு முறை என்று எதிர்க்கட்சி தலைவர் கூறியதாக தெரிவித்தார்.

அதுமட்டுமில்லாமல் மற்றொரு தவறான தகவல் என்னவென்றால் விவசாயிகளை முதல்வர் விஜய் சந்திக்கவில்லை என கூறினார்.

அவைக்கு ஒரு கூடுதல் தகவலாக இன்று மதியம் டெல்டா விவசாய சங்க பிரதிநிதிகளை மூத்த அமைச்சர்களை முதலில் சந்திக்க சொல்லி பின்னர் 3.30 மணியளவில் அவர்களை முதல்வர் சந்திக்க போன வாரமே அறிவுறுத்தலை வாங்கிவிட்டார். அது ஒரு பாயிண்ட்.

எதிர்க்கட்சி தலைவரை பார்த்து ஒரு கேள்வி கேட்கிறேன். அதற்கான விளக்கத்தை அவர் கொடுக்க வேண்டும்.

முக ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற திமுக ஆட்சியில் மேகதாது அணையை கட்டும் திட்ட அறிக்கையை கர்நாடக அரசு தயார் செய்த நிலையில் அதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மனுதாக்கல் செய்தது. அந்த மனுவை உச்சநீதிமன்றம் கடந்த டிசம்பரில் தள்ளுபடி செய்தது. அதை எதிர்த்து திமுக அரசு மீண்டும் சீராய்வு மனு தாக்கல் செய்தது. அந்த சீராய்வு மனுவும் கடந்த ஏப்ரல் மாதம் தள்ளுபடி செய்யப்பட்டது. மீண்டும் மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனு மீது கவனமாக வலுவாக ஸ்டாலினின் திமுக அரசு தரப்பு வாதிடவில்லை. அதனால் அதுவும் தலைமை நீதிபதி அமர்வால் தள்ளுபடி செய்யப்பட்டது.

மூன்று முறை தள்ளுபடி செய்ததற்கான காரணத்தை எதிர்கட்சி தலைவர் வழங்க வேண்டும். நாங்க இப்ப தான் வந்திருக்கோம். அவர்கள் ஏன் மூன்று முறை தோற்றார்கள் என கூற வேண்டும்" என கேட்டுக்கொண்டார்.

கே.என் நேரு

இதற்கு பதிலளித்த திமுக எம்எல்ஏ கே.என் நேரு, "மறுசீராய்வு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்யவில்லை. நீங்கள் கொஞ்சம் அவகாசம் எடுத்துக்கொண்டு வரவேண்டும் என்றுதான் சொன்னார்கள்.

அமைச்சர்கள் முதல்வரை புகழ்ந்து பேசுவது இயல்பு. நீங்கள் நல்லபடியாக ஒரு முடிவை எடுக்க வேண்டுமே ஒழிய சண்டை வளர்க்க கூடாது. மேகதாது விவகாரம் குறித்து ஒற்றுமையை பற்றி பேசும்போது நீங்கள் வேறுபாட்டை பற்றி பேசுகிறீரர்கள்.

மேகதாது விவகாரத்தில் தலைவர் ஸ்டாலின் எப்போதும் உடனுக்குடன் நடவடிக்கை எடுத்துள்ளார் என்பது வரலாறு" என தெரிவித்தார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com