

தமிழகத்தில் உள்ள அரசு பல்நோக்கு மருத்துவமனைகளில் தினக்கூலி அடிப்படையில் சுமார் 2500க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். கடந்த 2013 மற்றும் 2014-ம் ஆண்டுகளில் தற்காலிக பணி நியமன அடிப்படையில் இட ஒதுக்கீட்டை பின்பற்றி தமிழ்நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள இணை இயக்குநர்கள் மூலம் இவர்கள் பணியமர்த்தப்பட்டனர்.
ஐந்தாண்டு காலம் பணி முடிந்தவுடன் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என பணி நியமன ஆணையில் சொல்லப்பட்டிருந்த நிலையில், பல ஆண்டுகள் ஆகியும் இதுவரை இவர்கள் பணி நிரந்தரம் செய்யப்படவில்லை. மருத்துவப் பணியாளர்கள் தற்போது வரை தினக்கூலி அடிப்படையிலேயே பணிபுரிந்து வரும் நிலையில் தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என தொடர்ந்து அரசுக்கு கோரிக்கையை வைத்து வந்தனர்.
இந்த நிலையில், பணி நிரந்தரம், மாதம் ஒரு நாள் விடுமுறை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானத்தில் இன்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட போவதாக மருத்துவ பணியாளர்கள் அறிவித்து இருந்தனர். இதனையடுத்து இந்த போராட்டத்தை தடுக்கும் விதமாக நிர்வாகிகள் மற்றும் பணியாளர்களின் வீடுகளுக்கே சென்ற போலீசார் அவர்களை வீட்டு காவலில் வைத்தனர்.