போராட்டம் நடத்தும் அடிப்படை உரிமையை தமிழக காவல்துறை மறுப்பது கண்டனத்திற்குரியது - சிபிஎம்

போராட்டம் நடத்தும் அடிப்படை உரிமையை தமிழக காவல்துறை மறுப்பதும், அடக்குமுறைகளை ஏவி போராட்டக்காரர்களை ஒடுக்குவதும் ஜனநாயக விரோதமானது ஆகும்.
Shanmugam
Published on: 

சென்னையில் பணிநிரந்தரம் கோரி போராட்டம் நடத்திய பன்னோக்கு மருத்துவப் பணியாளர்கள் காவல்துறையினரால் குண்டுக்கட்டாகத் தூக்கிச் செல்லப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.அரசு மருத்துவமனைகளில் தற்காலிகமாகப் பணியில் சேர்ந்து 5 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையிலும், தங்களுக்கு இன்னும் பணி நிரந்தரம் வழங்கப்படவில்லை என குற்றம்சாட்டி போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இந்த போராடிய மருத்துவபணியாளர்களை காவல் செய்தது கண்டனத்திற்குரியது என சிபிஎம் தலைவர் சண்முகம் கண்டனங்களை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது சமூகவலைதள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது

பேச்சுவார்த்தை மூலம் கோரிக்கை நிறைவேற்ற வலியுறுத்தல்

சென்னையில் பணிநிரந்தரம் கோரி இன்று போராட்டம் நடத்திய பன்னோக்கு மருத்துவப் பணியாளர்களை காவல்துறையினர் குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று கைது செய்யதுள்ளதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.

தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் தற்காலிக பன்னோக்கு மருத்துவப் பணியாளர்கள் பணியில் சேர்ந்து 5 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி, சென்னை ராஜரத்தினம் மைதானத்தில் இன்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்திருந்தனர்.

ஆனால், அவர்களின் போராட்டத்துக்கு அனுமதி மறுத்த காவல்துறையினர், பிற மாவட்டங்களில் இருந்து போராட்டத்தில் பங்கேற்க சென்னை புறப்பட்ட நிர்வாகிகளை ஆங்காங்கே வீட்டுக்காவலில் அடைத்து வைத்துள்ளனர்.

இந்நிலையில், சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானம் அருகே பன்னோக்கு மருத்துவப் பணியாளர்கள் போராட்டம் நடத்தியதை அடுத்து, மருத்துவப் பணியாளர்களை காவல்துறையினர் குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று கைது செய்துள்ளது வன்மையான கண்டனத்துக்குரியது.

போராட்டம் நடத்துவது அடிப்படை உரிமை

அனுமதி வழங்க வேண்டிய காவல்துறை அனுமதி மறுக்கிற நிலையில், கோரிக்கைகளுக்காகப் போராடும் மக்கள் மீறுவதைத் தவிர வேறு என்ன வழி இருக்கிறது.

இந்நிலையில் தங்களின் நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தும் அடிப்படை உரிமையை தமிழக காவல்துறை மறுப்பதும், அடக்குமுறைகளை ஏவி போராட்டக்காரர்களை ஒடுக்குவதும் ஜனநாயக விரோதமானது ஆகும்.

5 ஆண்டுகளுக்கும் மேலாக பன்னோக்கு மருத்துவத்துறை பணியாளர்களை நிரந்தரப்படுத்தாமல் இருப்பது அநீதியானது மட்டுமல்ல, இடஒதுக்கீடு மீறலுமாகும். உயிர் காக்கும் மருத்துவத்துறை பணியாளர்களுக்கே காலமுறை ஊதிய உத்தரவாதம் இல்லை என்பது மாநிலத்தின் சுகாதார கட்டமைப்பை வலுப்படுத்திட உதவாது. எனவே, போராடும் சம்மந்தப்பட்ட பணியாளர்களை அழைத்து பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண தமிழ்நாடு அரசு முன்வர வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.

என்று தெரிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com