

பொன்னேரி மருத்துவமனைக்கு தற்போது காய்ச்சல் பாதித்து அதிக நோயாளிகள் வருகின்றனர். தற்போது காணப்படும் தலைவலி, சளி, இருமல், காய்ச்சல் குறித்து பொது மக்கள் அச்சப்பட தேவையில்லை.
பொன்னேரி அரசு பொது மருத்துவமனைக்கு தினமும் பொன்னேரி, மீஞ்சூர், சோழவரம், பழவேற்காடு உள்ளிட்ட சுற்று வட்டார கிராம பகுதியில் இருந்து தினமும் ஏராளமானோர் வந்து சிகிச்சை பெற்று செல்கிறார்கள்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக காய்ச்சல் பாதிப்பினால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்து உள்ளது. நாளுக்கு நாள் காய்ச்சலுக்காக வருபவர்கள் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களுக்கு தலைவலி, சளி, இருமல், உடல்வலி அதிகம் உள்ளது.
இதனால் பொதுமக்கள் கடும் சிரமம் அடைந்து வருகிறார்கள். பலர் இருமல், தொண்டை வலியால் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். இதேபோல் காய்ச்சலுக்கு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை தனியார் ஆஸ்பத்திரியிலும் அதிகரித்து வருகிறது. காய்ச்சல் பாதிப்பு காரணமாக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரி சித்த மருத்துவ வார்டில் கபசுர குடிநீர், நிலவேம்பு கசாயம் நோயாளிகளுக்கு வழங்க வைக்கப்பட்டு உள்ளன.
இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, சமீபத்தில் பெய்த மழைக்கு பின்னர் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. காய்ச்சலுடன் தொண்டை வலி, சளி, இருமல், தலைவலியும் வருகிறது. இதனால் எந்த வேலையும் செய்ய முடியவில்லை. உடல் முழுவதும் வலியும் ஏற்படுகிறது. காய்ச்சல் பாதிப்பிற்கான காரணம் என்ன என்று தெரியவில்லை என்றனர்.
இது குறித்து பொன்னேரி அரசு பொது மருத்துவமனை தலைமை மருத்துவர் கல்பனா கூறியதாவது:-
பொன்னேரி மருத்துவமனைக்கு தற்போது காய்ச்சல் பாதித்து அதிக நோயாளிகள் வருகின்றனர். தற்போது காணப்படும் தலைவலி, சளி, இருமல், காய்ச்சல் குறித்து பொது மக்கள் அச்சப்பட தேவையில்லை. பருவநிலை மாற்றம் காரணமாக ஏற்படும் சாதாரண வைரஸ் காய்ச்சல் தான். தொடர்ந்து 2 நாளைக்கு மேல் காய்ச்சல் இருந்தால் உடனடியாக அருகில் உள்ள மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்று ரத்த பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். மருத்துவர் ஆலோசனை இல்லாமல் தனியாக மருந்து கடைகளில் மருந்து உட்கொள்வது தவறு. தண்ணீரை கொதிக்க வைத்து சூடாக பருக வேண்டும். சுடுநீரில் உப்பு போட்டு வாய் கொப்பளிக்கலாம். வீட்டின் சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். இருமும் போது கை குட்டையை பயன்படுத்த வேண்டும். வீட்டின் அருகில் மழைநீர் தேங்காத வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும், சளி இருமல் காய்ச்சல் இருந்தால் உடனடியாக அரசு மருத்துவரை அணுக வேண்டும் என்றார்.