செக்கானூரணி காவல்நிலைய மரணம் விவகாரத்தில் உண்மை வெளிவர வேண்டும்- மாணிக்கம் தாகூர்

குற்றவியல் நீதிபதி விசாரணை 7 மணி நேரத்திற்கும் மேலாக நீடிக்கிறது.
Manickam Tagore
Published on: 

மதுரை திருமங்கலம் அருகே செக்கானூரணி காவல் நிலையத்தில் லாரி ஓட்டுநர் பாலகிருஷ்ணன் தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் புயலை கிளப்பியுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக, குற்றவியல் நீதிபதி விசாரணை 7 மணி நேரத்திற்கும் மேலாக நீடிக்கிறது. இந்நிலையில், இந்த விவகாரத்தில் உண்மை வெளிவர வேண்டும் என தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்த அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

மதுரை திருமங்கலம் அருகே செக்கானூரணி காவல்நிலையத்தின் கழிவறையில் தேனியைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் பாலகிருஷ்ணன் அவர்கள் தூக்கிட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும், பல்வேறு சந்தேகங்களையும் எழுப்புகிறது.

காவல் நிலையத்தின் பாதுகாப்பில் இருந்த ஒருவர் உயிரிழந்திருக்கிறார் என்றால், அதன் பின்னணியில் உள்ள உண்மைகள் முழுமையாக வெளிக்கொணரப்பட வேண்டும். எந்தவொரு குற்றவாளியும் தப்பிக்க இடமளிக்காமல், சட்டத்தின் அடிப்படையில் விரைந்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றியிருப்பதையும், தொடர்புடைய காவல்துறையினரை இடைநீக்கம் செய்திருப்பதையும் வரவேற்கிறோம். ஆனால், இது நடவடிக்கையின் தொடக்கமாக மட்டுமே இருக்க வேண்டும்; உண்மை வெளிவரும் வரை விசாரணை நேர்மையாகவும் வெளிப்படையாகவும் நடைபெற வேண்டும்.

காவல் மரணம் என்பது ஒரு தனிநபரின் உயிரிழப்பு மட்டுமல்ல. அது சட்டத்தின் ஆட்சி மீதும், காவல்துறை மீதும், அரசின் மீதும் மக்களின் நம்பிக்கையை பாதிக்கும் மிகக் கடுமையான பிரச்சினை.

பாதிக்கப்பட்ட பாலகிருஷ்ணன் அவர்களின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்குவதுடன், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கவும் தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நீதி நிலைநாட்டப்பட வேண்டும். உண்மை வெளிவர வேண்டும். பொறுப்பானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

X