அரசு ஆஸ்பத்திரியில் நாய்க்கு சிகிச்சை அளிக்ககோரி ரகளை செய்த குடிமகன்

பரமத்திவேலூர் அருகே உள்ள பாலப்பட்டி, எல்லைமேடு டாஸ்மாக் கடையில் மது அருந்திய இரு தரப்பினரிடையே வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியது.
அரசு ஆஸ்பத்திரியில் நாய்க்கு சிகிச்சை அளிக்ககோரி ரகளை செய்த குடிமகன்
Published on: 
Summary

அடுத்தடுத்து அரங்கேறும் குடிமகன்களின் இத்தகைய அத்துமீறல்களால் மருத்துவமனைக்கு வரும் பொதுமக்களும், பணியாற்றும் செவிலியர்களும் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரில் செயல்பட்டு வரும் தாலுகா அரசு தலைமை மருத்துவ மனைக்கு பரமத்திவேலூர். பாலப்பட்டி, நன்செய் இடையாறு, குப்புச்சிபாளையம், பொத்தனூர், பாண்டமங்கலம் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் நாள்தோறும் சிகிச்சைக்காக வருகின்றனர்.

சிகிச்சை

தினமும் சுமார் 500-க்கும் மேற்பட்டோர் புறநோயாளிகளாகவும், 80-க்கும் மேற்பட்டோர் உள்நோயாளிகளாகவும் இங்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் சிகிச்சைக்கு வரும் குடிமகன்களால் அவ்வப்போது பரபரப்பு நிலவி வருகிறது.

இந்த நிலையில் பரமத்திவேலூர் அருகே உள்ள பாலப்பட்டி, எல்லைமேடு டாஸ்மாக் கடையில் மது அருந்திய இரு தரப்பினரிடையே வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியது.

அரசு மருத்துவமனை

இதில் 4 பேருக்கு மண்டை உடைந்து ரத்த காயம் ஏற்பட்டது. காயமடைந்தவர்கள் பரமத்திவேலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டுவரப்பட்டனர்.

அங்கு சிகிச்சையில் இருந்தபோதும் இரு கோஷ்டியினரும் மருத்துவமனை வளாகத்திலேயே மீண்டும் ஆக்ரோஷமாக மோதிக்கொண்டனர். இதனால் அதிர்ச்சியடைந்த நோயாளிகளும், அவர்களது உறவினர்களும் அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடினர்.

போலீசார்

தகவலறிந்து வந்த பரமத்திவேலூர் போலீசார் இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தி மேல் சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

குடிபோதை

இச்சம்பவம் ஓய்வதற்குள் அன்று மாலையில் பரமத்தி வேலூரை சேர்ந்த வேல்முருகன் (45) என்பவர் குடிபோதையில் காயமடைந்த தெருநாய் ஒன்றை மருத்துவமனைக்குள் கொண்டு வந்து அதற்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என கூறி தகராறில் ஈடுபட்டார்.

இங்கு மனிதர்களுக்கு மட்டுமே சிகிச்சை அளிக்க முடியும், கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு செல்லுங்கள் என்று அங்கிருந்தவர்கள் நீண்ட நேரம் எடுத்துக்கூறி போராடி அவரை வெளியே அனுப்பி வைத்தனர்.

பொதுமக்கள்

தொடர்ந்து அடுத்தடுத்து அரங்கேறும் குடிமகன்களின் இத்தகைய அத்துமீறல்களால் மருத்துவமனைக்கு வரும் பொதுமக்களும், பணியாற்றும் செவிலியர்களும் அச்சத்தில் உறைந்துள்ளனர். எனவே பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய பரமத்திவேலூர் அரசு தலைமை மருத்துவமனையில் நிரந்தரமாக போலீஸ் பாதுகாப்பு போட வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், நோயாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com