

விபத்தில் வேன் டிரைவர் மற்றும் வேனில் இருந்த ஐயப்ப பக்தர் ஒருவர் என 2 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் வருதாபுரத்தை சேர்ந்த 15 ஐயப்ப பக்தர்கள் ஒரு வேனில் சில தினங்களுக்கு முன்பு சபரிமலைக்கு சென்றனர்.
பின்னர் அவர்கள் அங்கு சாமி தரிசனத்தை முடித்து விட்டு மீண்டும் தங்களது சொந்த ஊருக்கு வந்து கொண்டிருந்தனர்.
ஐயப்ப பக்தர்கள் சென்ற வேன் இன்று அதிகாலை விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த கன்னிகாபுரம் பகுதியில் உள்ள சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது ஓய்வுக்காக ஐயப்ப பக்தர்கள் வேனை ஓட்டி வந்த டிரைவர் வேனை அந்த பகுதியில் சாலையோரம் நிறுத்தியதாக தெரிகிறது.
அந்த வேனுக்கு பின்புறம் விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் இருந்து பார்சல்களை ஏற்றிக்கொண்டு சென்னை நோக்கி சென்ற லாரியும் நின்றிருந்தது. இந்த நிலையில் தேனி மாவட்டம் கம்பத்தில் இருந்து சென்னை நோக்கி தனியார் ஆம்னி பஸ் ஒன்று வந்தது. அந்த பஸ், திண்டிவனம் அடுத்த கன்னிகாபுரம் பகுதியில் வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது.
கட்டுப்பாட்டை இழந்த பஸ், தாறுமாறாக ஓடி சாலையோரம் நிறுத்தி இருந்த லாரி மீது மோதியதுடன், அங்கு நிறுத்தியிருந்த ஐயப்ப பக்தர்கள் வந்த வேன் மீதும் பயங்கரமாக மோதியது.
லாரி, வேன் மீது மோதிய தனியார் பஸ், அதே வேகத்தில் அருகே உள்ள கடைக்குள் சென்று புகுந்து நின்றது. தனியார் ஆம்னி பஸ் மோதியதில், வேனின் முன்பகுதி முழுவதும் சேதம் அடைந்து சாலையில் கவிழ்ந்தது.
இந்த விபத்தில் வேன் டிரைவர் மற்றும் வேனில் இருந்த ஐயப்ப பக்தர் ஒருவர் என 2 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் வேனில் இருந்த 13 பக்தர்கள் பலத்த காயம் அடைந்து காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள் என சத்தம் போட்டனர்.
அவர்களது சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் ஓடி சென்று காயத்துடன் போராடியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இதுகுறித்து மயிலம் போலீசாருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது.
தகவல் அறிந்ததும் மயிலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வேனில் காயத்துடன் சிக்கியவர்களை மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் உயிரிழந்த 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக மயிலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விபத்தில் இறந்தவர்கள் ஊர் விவரம் மட்டுமே தெரியவந்துள்ளது. அவர்களின் பெயர் விவரங்கள் உள்ளிட்டவை தெரியவில்லை. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த கோர விபத்து காரணமாக சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து விபத்தில் சிக்கிய வாகனங்களை கிரேன் மூலமாக அங்கிருந்து அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர். அதிகாலை நடந்த இந்த கோர விபத்து அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.