மாமல்லபுரம் அருகே வேன் மீது பஸ் மோதி 2 பெண்கள் பலி

பலியான 2 பெண்களின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக அதே ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டு உள்ளது.
மாமல்லபுரம் அருகே வேன் மீது பஸ் மோதி 2 பெண்கள் பலி
Published on: 
Summary

விபத்தில் வேன் மோதியதில் சாலையின் குறுக்கே வந்த மாடும் பலத்த காயம் அடைந்தது. மாமல்லபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்போரூர் அடுத்த புதுப்பாக்கத்தில் உள்ள தனியார் கம்பெனியில் கூவத்தூர் அடுத்த ஓதியூர் பகுதியை சேர்ந்த ஏராளமானோர் வேலை பார்த்து வருகிறார்கள்.

இன்று காலை பெண்கள் உள்படமொத்தம் 16 பேர் வேனில் கம்பெனிக்கு வேலைக்காக புறப்பட்டு சென்றனர். வேனை டிரைவர் சரத்குமார் என்பவர் ஓட்டினார்.

மாமல்லபுரம் அடுத்த பையனூர் ஓ.எம்.ஆர் சாலையில் சென்று கொண்டிருந்த போது மாடு ஒன்று திடீரென குறுக்கே பாய்ந்தது. இதில் கட்டுப்பாட்டை இழந்த வேன் எதிரே தாம்பரத்தில் இருந்து மாமல்லபுரம் நோக்கி வந்த மாநகர பஸ் (தடம் எண் 515) மீது பயங்கரமாக மோதியது.

விபத்து பலி

இதில் வேன் முழுவதும் நொறுங்கியது. இந்த விபத்தில் வேனில் இருந்த ஜெயலட்சுமி (வயது40), துர்காலட்சுமி (36) ஆகிய 2 பேரும் இடிபாடுகளில் சிக்கி பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.

மேலும் வேனில் பயணம் செய்த ரஜினா, உத்ரா, ரீட்டா, முத்துலட்சுமி, சுதா, தனலட்சுமி உள்ளிட்ட 13 பெண்கள் படுகாயம் அடைந்தனர். மேலும் இந்த விபத்தில் பஸ்சின் முன்பகுதியும் பலத்த சேதம் அடைந்தது. அதில் இருந்த பயணிகள் லேசான காயத்துடன் தப்பினர். தகவல் அறிந்ததும் மாமல்லபுரம் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். காயம் அடைந்தவர்களை மீட்டு மாமல்லபுரம், செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பிரேத பரிசோதனை

இதில் ஓதியூரை சேர்ந்த ஐஸ்வர்யா (24) என்பவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. அவருக்கு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சகிச்சை அளிக்கப்படுகிறது. பலியான 2 பெண்களின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக அதே ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டு உள்ளது.

விபத்து நடந்ததும் வேன் டிரைவர் சரத்குமார் தப்பி ஓடியதாக தெரிகிறது. இந்த விபத்தில் வேன் மோதியதில் சாலையின் குறுக்கே வந்த மாடும் பலத்த காயம் அடைந்தது. மாமல்லபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப் பட்டது.

X