

மதுராந்தகம், தாராபுரம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியது.
தமிழக சட்டசபைக்கு கடந்த 4 மாதங்களுக்கு முன்பு தேர்தல் நடந்தது. இதில், திருப்பூர் மாவட்டம் தாராபுரம் (தனி) சட்டமன்ற தொகுதியில், அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் சத்தியபாமா வெற்றி பெற்றார். ஆனால் அவர், தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து, அந்த தொகுதி காலியானதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. தாராபுரம் தொகுதிக்கு இடைத்தேர்தல் நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது.
மதுராந்தகம், தாராபுரம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கு அடுத்த மாதம் (அக்டோபர்) 6-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
இந்நிலையில் மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கியது. தினமும் காலை 11 மணிக்கு தொடங்கி 3 மணி வரை வேட்பு மனு தாக்கல் செய்யலாம்.
இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று முதல் வருகிற 16-ந்தேதி வரை நடைபெறுகிறது. வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை 17-ந்தேதி நடைபெறும். வேட்புமனுக்களை திரும்ப பெற 19-ந்தேதி கடைசி நாள் ஆகும். அக்டோபர் 6-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெறும். அக்டோபர் 9-ந்தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளதையடுத்து உரிய ஆவணங்கள் இன்றி ரூ.50 ஆயிரத்துக்கு மேல் பணம் கொண்டு சென்றால் பறிமுதல் செய்யப்படும்.
தாராபுரம் (தனி) தொகுதி இடைத்தேர்தலுக்கான ஏற்பாடுகளை தேர்தல் நடத்தும் அதிகாரியும், ஆர்.டி.ஓ.வுமான பெலிக்ஸ்ராஜா தலைமையிலான அதிகாரிகள் தீவிரப்படுத்தி உள்ளனர்.
மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. தேர்தல் தொடர்பான புகார்கள் தொலைபேசி வாயிலாக பெறப்பட்டு, அவற்றின் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் தேர்தல் தொடர்பான புகார்களை 1950, 1800-425-7088, 044-27427412 ஆகிய தொலைபேசி எண்களில் எந்த நேரமும் தெரிவிக்கலாம்.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால், அரசு மற்றும் பொது இடங்களில் உள்ள அரசியல் கட்சிகளின் சுவர் விளம்பரங்கள், சுவரொட்டிகள், விளம்பர பதாகைகள் உள்ளிட்டவற்றை அகற்றப்பட்டு வருகின்றன.
மேலும், வேட்பாளர்கள் அல்லது அரசியல் கட்சிகள் பிரசார கூட்டங்கள் நடத்துதல், ஒலிபெருக்கி பயன்படுத்துதல், வாகன ஊர்வலம் நடத்துதல், தற்காலிக கட்சி அலுவலகம் அமைத்தல் உள்ளிட்டவற்றுக்கு தேர்தல் ஆணையத்தின் இணையதள செயலி மூலம் விண்ணப்பித்து முன் அனுமதி பெற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வேட்பு மனு தாக்கல் தொடங்கி உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தங்கள் கட்சி வேட்பாளர்களை தேர்வு செய்ய தீவிரமாகி உள்ளன.
மதுராந்தகம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட முன்னாள் எம்எல்ஏ கணிதா சம்பத் விருப்ப மனு தாக்கல் செய்தார்.