மதுரை நகைக்கொள்ளை சம்பவம் - மாறு வேடத்தில் நகைக்கடைக்கு வந்து சென்ற வாலிபர் வீட்டில் சோதனை

சந்தேகப்படும் வாலிபர் யூடியூப் சேனல் நடத்தி வருகிறார்.
மதுரை நகைக்கொள்ளை சம்பவம் - மாறு வேடத்தில் நகைக்கடைக்கு வந்து சென்ற வாலிபர் வீட்டில் சோதனை
Published on: 
Summary

மதுரையில் நடந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக வாலிபர் வீட்டில் 7 மணி நேரம் சோதனை நடந்தது.

வாலிபர் வீட்டில் சோதனை

மதுரை பழங்காநத்தம்-காளவாசல் பைபாஸ் சாலையில் உள்ள பிரபல நகைக்கடையில் ரூ.21 கோடி தங்க, வைர நகைகள் கொள்ளைபோன சம்பவம் தொடர்பாக தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடந்து வருகிறது.

கொள்ளையன் தப்பிச் சென்றதாக கூறப்படும் சாலைகளில் இருந்த கண்காணிப்பு கேமராக்களை போலீசார் சோதனை செய்தனர். அதில் அவன் மாடக்குளம் சாலை வழியாக பெண்களுக்கான இருசக்கர வாகனத்தில் தப்பிச்சென்றது உறுதி செய்யப்பட்டது. இந்த சம்பவம் நடந்த கடையின் பின்புற சாலையில் இருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்குள் உள்ள ஒரு தெருவை சேர்ந்த வாலிபர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அந்த வாலிபரின் வீட்டில் நேற்று போலீசார் அதிரடியாக சோதனை நடத்தினர். சுமார் 7 மணி நேரமாக சோதனை நடந்தது.

கடைக்கு 3 முறை வந்துள்ளார்

இதனால் அந்த தெரு பகுதி முழுவதும் போலீசார் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டது. ஆனால் கொள்ளைபோன நகைகள் எதுவும் கிடைக்கவில்லை. சந்தேகப்படும் அந்த வாலிபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தியதில் அவர், கடைசியாக வீட்டுக்கு வந்து சென்றபின்பு, பல மணி நேரமாக வீட்டுக்கு வராமல் இருந்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், "சந்தேகப்படும் வாலிபர் யூடியூப் சேனல் நடத்தி வருகிறார். அவர் சமூக வலைதளங்களில் பல்வேறு வீடியோக்களை பதிவு செய்து வந்தார். மேலும் விலை உயர்ந்த மோட்டார் சைக்கிள் வைத்து சாகசங்கள் செய்து அதனை வீடியோவாகவும் பதிவிட்டு வந்தார். கொள்ளை நடந்த நகைக்கடைக்கு அவர் வேறு வேறு நாட்களில் 3 முறை வந்து சென்றது கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது.

வெவ்வேறு வேடம்

ஒவ்வொரு முறை வரும்போதும் மாறு வேடங்களில் வந்து நகைக்கடையை நோட்டமிட்டு உள்ளார். அவரது புகைப்படங்களை, இப்போதுள்ள தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இவர்தான் கொள்ளையில் ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விசாரணை முடிவில் கொள்ளையன் யார்? என்பது தெரியவரும்" என்றனர். மேலும், இதுதொடர்பாக பொள்ளாச்சியைச் சேர்ந்த பழைய குற்றவாளியான விஜில்குமாரிடம் மதுரை தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஒத்திகை பார்த்த கொள்ளையன்

கொள்ளை நடந்த கடையில் நேற்று 2-வது நாளாக போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:-

நகைக்கடையில் வேலை செய்யும் நபர்களுக்கும், இந்த கொள்ளைக்கும் தொடர்பு இருக்கிறதா என்ற கோணத்தில் 2-வது நாளாக விசாரணை நடத்தினோம். ஏற்கனவே கடைக்கு வந்து நோட்டமிட்ட கொள்ளையன்தான் நன்கு திட்டமிட்டு கைவரிசை காட்டி இருக்கிறான். மேலும் அவன் 3 முறை நகைக்கடைக்கு வந்து ஒத்திகை பார்த்துள்ளான்.

சந்தேகத்தைத் தவிர்க்க நான்கு சக்கர வாகனத்திற்கு பதிலாக பெண்கள் ஓட்டும் இருசக்கர வாகனத்தைப் பயன்படுத்தி, கொள்ளையடித்த நகைகளை டிராலி பையில் வைத்து முன்பகுதியில் தொங்கவிட்டு தப்பியோடியுள்ளான். சந்து பொந்துகள் வழியாக மாடக்குளம் சாலை நோக்கி அதிகாலை 3.34 மணிக்கு அவன் தப்பிச் சென்ற காட்சிகள் பதிவாகியுள்ளன. அந்த காட்சிகளின் அடிப்படையிலும் விசாரணை நடக்கிறது.

இவ்வாறு போலீசார் கூறினர்.

X