திருச்சியை சேர்ந்தவரை திருமணம் செய்த இலங்கை பெண்ணை நாடு கடத்த கூடாது- மதுரை ஐகோர்ட் உத்தரவு

மனுதாரர் வக்கீல் ஆஜராகி, இந்த வழக்கு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, கர்ப்பமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.
திருச்சியை சேர்ந்தவரை திருமணம் செய்த இலங்கை பெண்ணை நாடு கடத்த கூடாது- மதுரை ஐகோர்ட் உத்தரவு
Published on: 
Summary

திருமணம் முறைப்படி நடத்தப்பட்டு பதிவு செய்யப்பட்டால், பொருந்தக்கூடிய சட்ட விதிகளுக்கு உட்பட்டு அவர் இந்தியாவில் தொடர்ந்து தங்க அனுமதிக்கப்பட வேண்டும்.

இலங்கையை சேர்ந்த பவித்ரா, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், திருச்சி மாவட்டம் லால்குடி அருகே கொண்ணைக்குடியைச் சேர்ந்தவர் அருண்குமார். இவரும், நானும் கடந்த ஜூன் 4-ந் தேதி குடும்பத்தினர் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டோம். எனவே, எங்களது திருமணத்தை சிறப்பு திருமண சட்டத்தின் கீழ் பதிவு செய்ய லால்குடி சார் பதிவாளருக்கு உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.

நீதிபதி

இந்த வழக்கு நீதிபதி சரவணன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு வக்கீல் ஆஜராகி, மனுதாரர் கடந்த மே 14-ந் தேதி ஒரு மாத கால சுற்றுலா இ-விசா பெற்றுக் கொண்டு இந்தியா வந்துள்ளார். அந்த விசா கடந்த ஜூன் 13-ந் தேதியுடன் முடிவடைந்தது.

விசா

அதன்பிறகும் அவர் இந்தியாவில் தங்கியிருந்ததால், விசா விதிமுறைகளை மீறியுள்ளதாக கருதி அவரை நாடு கடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என வாதாடினார்.

மனுதாரர் வக்கீல்

பின்னர் மனுதாரர் வக்கீல் ஆஜராகி, இந்த வழக்கு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, கர்ப்பமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து, அவருக்கு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை வழங்கும்படி கோர்ட்டு உத்தரவிட்டது. மேலும் மனுதாரரை நாடு கடத்தும் நடவடிக்கைகளை செப்டம்பர் 30-ந் தேதி வரை நிறுத்தி வைத்திருந்தது என தெரிவித்தார்.

விசாரணை முடிவில் நீதிபதி பிறப்பித்த உத்தரவு வருமாறு:-

கடந்த ஜூன் 4-ந் தேதி பவித்ராவும் அருண்குமாரும் செய்து கொண்ட திருமணம் சட்டப்படி அங்கீகாரம் வழங்குவதாக இருக்கவில்லை. எனவே, அந்த திருமணத்தை பதிவு செய்ய நேரடியாக உத்தரவிட முடியாது. ஆனாலும் அவர்களது திருமண உறவை கலைக்க நீதிமன்றம் விரும்பவில்லை. எனவே இந்து திருமண சட்டம், இந்திய கிறிஸ்தவ திருமண சட்டம் அல்லது சிறப்பு திருமண சட்டம் ஆகியவற்றில் பொருந்தக்கூடிய ஏதாவது ஒரு சட்டத்தின்கீழ் 60 நாட்களுக்குள் செல்லு படியாகும் திருமணத்தை நடத்தி பதிவு செய்து கொள்ள அவகாசம் வழங்கப்படுகிறது.

மருத்துவ உதவி

அதுவரை மனுதாரரை நாடு கடத்தக்கூடாது. திருமணம் முறைப்படி நடத்தப்பட்டு பதிவு செய்யப்பட்டால், பொருந்தக்கூடிய சட்ட விதிகளுக்கு உட்பட்டு அவர் இந்தியாவில் தொடர்ந்து தங்க அனுமதிக்கப்பட வேண்டும். மேலும் தற்போதைய அவரது உடல் நிலையை கருத்தில் கொண்டு தேவையான போது மருத்துவ உதவிகளை வழங்க வேண்டும்.

இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.

X

Maalai Malar
www.maalaimalar.com