

சேலம் அருகே தானகுட்டிவளவு பகுதியில் உள்ள விவசாய கிணற்றில் இருந்து சாக்கு மூட்டையில் கோகிலா பிணமாக மீட்கப்பட்டார்.
சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட கோண சமுத்திரம் கிராமம் கருங்குள்ளன் வட்டம் பகுதியைச் சேர்ந்தவர் பேராக்கவுண்டர். இவரது மகள் கோகிலா (வயது 23). கல்லூரி படிப்பை முடித்த இவர் வேலைக்கு ஏதும் செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார்.
திருமணம் ஆகாத கோகிலா கடந்த ஆகஸ்ட் மாதம் 20-ந் தேதி தனக்கு கடுமையான வயிற்று வலி இருப்பதாக பெற்றோரிடம் தெரிவித்தார். இதனை அடுத்து கோகிலாவை அவரது குடும்பத்தினர் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்று மருத்துவ பரிசோதனை செய்தனர். அப்போது கோகிலா 7 மாத கர்ப்பிணியாக இருப்பது தெரியவந்தது. இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த கோகிலாவின் குடும்பத்தினர் இதுகுறித்து சங்ககிரி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து போலீசார் கோகிலாவிடம் விசாரணை நடத்தினர். அதன் அடிப்படையில் கோண சமுத்திரம் கிராமம் அருகே உள்ள கன்னியாம்பட்டி பகுதியைச் சேர்ந்த மாரி என்பவரது மகன் அம்மாசி (26) என்பவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது கோகிலாவின் கர்ப்பத்திற்கு அம்மாசிதான் காரணம் என்று தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் கோகிலாவை திருமணம் செய்து கொண்டு வாழும் படி அம்மாசிக்கு அறிவுரை வழங்கினர். அப்போது தனது ஊரில் கோவில் திருவிழா நடப்பதாகவும் திருவிழா முடிந்த பின் கோகிலாவை திருமணம் செய்து கொள்வதாகவும், அதுவரை கோகிலா தன் வீட்டில் இருக்கட்டும் என கூறிய அம்மாசி கோகிலாவை தன்னுடன் கன்னியாம்பட்டியில் உள்ள தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றார்.
இந்நிலையில் அம்மாசியின் வீட்டிலிருந்த கோகிலா கடந்த மாதம் 25-ந் தேதி திடீரென காணாமல் போனதாக அம்மாசி, கோகிலாவின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து பல இடங்களில் தேடியும் கோகிலா கிடைக்காத நிலையில் இதுகுறித்து கோகிலாவின் பெற்றோர் கொங்கணாபுரம் போலீஸ் நிலையத்தில் மீண்டும் புகார் அளித்தனர்.
இந்நிலையில் நேற்று கொங்கணாபுரம் அருகே உள்ள வெள்ளாளபுரம் கிராமம், தானகுட்டிவளவு பகுதியில் உள்ள விவசாய கிணற்றில் இருந்து சாக்கு மூட்டையில் கோகிலா பிணமாக மீட்கப்பட்டார்.
போலீசாரின் விசாரணையில் கோகிலாவை கொலை செய்து உடலை சாக்கு மூட்டையில் கட்டி கிணற்றில் வீசியதை அம்மாசி ஒப்புக்கொண்டார். இதையடுத்து போலீசார் அம்மாசியை கைது செய்தனர். மேலும் அவர் போலீசில் வாக்குமூலமாக கூறியதாவது:-
சம்பவத்தன்று இரவு நான் கோகிலாவிடம் நீ கர்ப்பமாக இருப்பதை வெளியில் சொல்லி என்னை அசிங்கப்படுத்தி விட்டாயே என்று கேட்டேன். அப்போது எங்கள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த நான் கோகிலாவை பலமாக தாக்கினேன். இதில் கோகிலா நிலைகுலைந்து மயங்கி விழுந்தார். பின்னர் நான் கோகிலாவை அவரது துப்பட்டாவால் கழுத்தை இறுக்கி கொடூரமாக கொலை செய்தேன்.
தொடர்ந்து நள்ளிரவு நேரத்தில் வீட்டிலிருந்த ஒரு சாக்கு பையில் கோகிலாவின் உடலை திணித்து மூட்டையாக கட்டி எனது இருசக்கர வாகனத்தில் கொண்டு சென்று வெள்ளாளபுரம் அருகே உள்ள விவசாய கிணற்றில் வீசினேன். பின்னர் கோகிலா பெற்றோரிடம் கோகிலா மாயமாகி விட்டதாக தெரிவித்தேன். இதையடுத்து அனைவரும் மாயமான கோகிலாவை தேடினர். நானும் அவர்களுடன் சேர்ந்து கோகிலாவை தேடுவது போல் நடித்தேன் என்றார்.