கடல் கடந்து வந்த காதல்.. - வியட்நாம் பெண்ணை கரம்பிடித்த ஓசூர் விமானி!

நவம்பர் 13-ஆம் தேதி திருவண்ணாமலையில் இவர்களது திருமணம் இந்து முறைப்படி நடைபெற்றது.
Vietnam To India
Published on: 
Summary

செல்போன் செயலி மூலம் ஏற்பட்ட பழக்கம் காதலாக மலர்ந்த நிலையில், வியட்நாம் நாட்டுப் பெண்ணை கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் பெற்றோர்கள் சம்மதத்துடன் வைதீக முறைப்படி கரம்பிடித்துள்ளார்.

IT டூ பைலட் கார்த்திகேயன்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மின் நகர் பகுதியைச் சேர்ந்தவர் பச்சமுத்து. இவர் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் ஓட்டுநராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவார். இவருடைய மனைவி குறிஞ்சி. இந்த தம்பதியரின் மகன் கார்த்திகேயன், முதுகலை பட்டம் பெற்று ஆரம்பத்தில் தகவல் தொழில்நுட்ப துறையில் பணியாற்றி வந்தார்.

பின்னர், தனது துறையை மாற்றிக்கொண்ட அவர், கடின உழைப்பால் விமானி பயிற்சி பெற்று, தற்போது பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் வான்வழி நிறுவனத்தில் விமானியாகப் பணியாற்றி வருகிறார்.

APP மூலம் வந்த காதல்

ஜப்பானிய மொழியைக் கற்றுக்கொள்வதற்காக கார்த்திகேயன் தனது செல்போனில் ஒரு செயலியைப் பயன்படுத்தி வந்துள்ளார். அதே செயலி மூலம், வியட்நாம் நாட்டின் பாக் நின் மாகாணத்தைச் சேர்ந்த ட்ரியூ திங் ஙன் என்ற இளம்பெண்ணிடம் பழக்கம் கார்த்திகேயனுக்கு ஏற்பட்டுள்ளது. வியட்நாமின் சூக்கோ தீவு பகுதியில் ஆசிரியையாகப் பணியாற்றி வரும் ட்ரியூ திங் ஙன், கடந்த ஒரு வருடமாக கார்த்திகேயனுடன் ஆன்லைனில் நட்பாகப் பழகி வந்துள்ளார்.

இந்தச் சூழலில், கடந்த ஜூன் மாதம் சுற்றுலாப் பயணியாக இந்தியா வந்த ட்ரியூ திங் ஙன், டெல்லி, பெங்களூரு, மதுரை போன்ற இடங்களுக்குச் சென்றபோது கார்த்திகேயனை நேரில் சந்தித்துப் பேசினார். இந்த நேரில் நேர்ந்த சந்திப்புகளின் போது இருவரின் எண்ணங்களும், விருப்பங்களும் ஒத்துப்போகவே இவர்களது நட்பு காதலாக மலர்ந்தது. இதனைத் தொடர்ந்து, இருவரும் தங்களது காதல் குறித்து இருவீட்டுப் பெற்றோரிடமும் பேசி பச்சைக்கொடி காட்டச் செய்தனர்.

திருவண்ணாமலையில் திருமணம்

இருவீட்டாரின் சம்மதத்தை அடுத்து, கடந்த நவம்பர் 13-ஆம் தேதி திருவண்ணாமலையில் உள்ள உலகப் புகழ்பெற்ற அண்ணாமலையார் கோயில் முன்பு, இந்து முறைப்படி கார்த்திகேயன் - ட்ரியூ திங் ஙன் ஆகியோரின் திருமணம் மிகவும் விமர்சையாக நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து அங்குள்ள ஒரு தனியார் சொகுசு விடுதியில் திருமண வரவேற்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் கார்த்திகேயனின் குடும்பத்தினர், நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என சுமார் 150-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

திருமணச் சடங்குகளை இனிதே முடித்துக்கொண்ட இந்த சர்வதேசக் காதல் தம்பதியர், நேற்று மாலை ஓசூர் திரும்பினர். அவர்களை கார்த்திகேயனின் குடும்பத்தினர் ஆரத்தி எடுத்து மகிழ்ச்சியுடன் தங்களது இல்லத்திற்கு வரவேற்றனர். மொபைல் ஆப் மூலம் தொடங்கி, எல்லைகளைக் கடந்து ஓசூரில் முடிந்துள்ள இந்த வியட்நாம் டூ இந்தியா காதல் திருமணம் இப்பகுதியில் பெரும் சுவாரசியத்தை ஏற்படுத்தியுள்ளது.

X