

யானையை வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறை ஊழியர் பட்டாசை வெடித்து விரட்டும் காட்சி சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட வனப்பகுதிகளில் யானைகள் அதிக அளவில் வசித்து வருகின்றன. சமீபகாலமாக அடர்ந்த வனப்பகுதியை விட்டு வெளியேறும் யானைகள் தேசிய நெடுஞ்சாலையில் கரும்பு லோடுகளை ஏற்றி வரும் வாகனங்களை தனியாகவும், கூட்டமாகவும் சென்று வழிமறிக்கும் சம்பவம் தொடர்ந்த அதிகரித்து வருகிறது.
ஈரோடு மாவட்டம் தாளவாடி மலை பகுதியில் இருந்து தினமும் லாரிகளில் கரும்புகளை ஏற்றி சத்தியமங்கலத்துக்கு கொண்டு செல்வது வழக்கம். கர்நாடகாவில் இருந்து நூற்றுக்கணக்கான லாரிகளில் கரும்புகளை ஏற்றிக் கொண்டு சத்தியமங்கலம் நோக்கி வருகின்றன. அப்படி கரும்பு ஏற்றி வரும் லாரிகளை யானைகள் முற்றுகையிட்டு கரும்பு கட்டுகளை லாரியில் இருந்து தும்பிக்கையால் லாவகரமாக எடுத்து அதனை சாலையில் போட்டு சாப்பிட்டு விட்டு பின்னர் மீண்டும் வனப்பகுதிக்குள் செல்கிறது. சாலையில் கிட்டத்தட்ட அரை மணி நேரம் கரும்புகளை யானைகள் சாப்பிடுவதால் போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டு வருகிறது.
இந்நிலையில் நேற்று மைசூரில் இருந்து ஆசனூர் செல்லும் சாலையில் கரும்பை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று வந்தது. அப்போது வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை யானை லாரியை வழிமறித்து லாரியில் இருந்த கரும்பை உருவி சாலையில் போட்டு சாப்பிட்டுக் கொண்டிருந்தது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இதை அறிந்த வனத்துறை பணியாளர் ஒருவர் யானையை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டார். ஆனால் யானை சிறிதும் அசராமல் அதே இடத்தில் நின்று கொண்டிருந்தது. இதனை அடுத்து அவர் பட்டாசை வெடித்து யானையை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டார். அப்போதும் அந்த யானை அசராமல் அங்கேயே நின்று கொண்டிருந்தது. பின்னர் ஒரு வழியாக யானை மீண்டும் வனபகுதிக்குள் சென்றது. இதை அடுத்து அந்த பகுதியில் போக்குவரத்து சீரானது. யானையை வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறை ஊழியர் பட்டாசை வெடித்து விரட்டும் காட்சி சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.