

ஆசனூர் சுற்றுவட்டார பகுதிகளில் மனிதர்கள், கால்நடைகளை தொடர்ந்து வேட்டையாடி வந்த சிறுத்தை கூண்டில் சிக்கி உள்ளதால் அப்பகுதி பொதுமக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட ஆசனூர் வனப்பகுதியில் புலி, சிறுத்தை, யானை, கரடி உள்ளிட்ட வன விலங்குகள் அதிகம் வசிக்கின்றன. வன விலங்குகள் அடர்ந்த வனப்பகுதியை விட்டு வெளியேறி அருகே இருக்கும் கிராமத்துக்குள் புகுந்து விளை நிலங்களை சேதப்படுத்துவதும், கால்நடைகளை வேட்டையாடுவதும் தொடர்கதையாக இருந்து வருகிறது.
இந்நிலையில் கடந்த சில மாதங்களாக ஆசனூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான பங்களாதொட்டி, அரேப்பாளையம், ஒங்கல்வாடி, பழைய ஆசனூர் உள்ளிட்ட கிராமங்களில் பகுதியில் சிறுத்தைகள் நடமாட்டம் அதிகரித்து காணப்பட்டது.
வனப்பகுதியில் வசிக்கும் சிறுத்தைகள் இரவு மற்றும் பகல் நேரங்களில் வனப்பகுதியில் இருந்து வெளியேறி அவ்வப்போது கால்நடைகளை தொடர்ச்சியாக வேட்டையாடி வந்தது. மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆசனூர் பங்களாதொட்டி கிராமத்தை சேர்ந்த பெரியசாமி என்கிற வாலிபர் நடந்து சென்று கொண்டிருந்த போது புதரில் மறைந்து இருந்த சிறுத்தை அவரைக் கடித்துக் கொன்றது.
இதனால் மலை கிராம மக்கள் பீதி அடைந்தனர் இதைத் தொடர்ந்து அந்த சிறுத்தை ஆடு, மாடுகளை தொடர்ந்து வேட்டையாடி வந்தன ஆசனூர் வனத்துறை அலுவலகம் முன்பு இரவில் படுத்திருந்த சிறுத்தை அந்த வழியாக சென்ற குதிரையை கடித்து கொல்ல முயன்றது.
தொடர் அட்டகாசத்தில் ஈடுபட்டு வந்த சிறுத்தையை பிடிக்க கோரி பொதுமக்கள் ஆசனூர் வனத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சிறுத்தையை உடனடியாக கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தனர்.
இதையடுத்து வனத்துறை சார்பில் அரேப்பாளையம் ஆசனூர் ஆகிய 2 இடங்களில் சிறுத்தை பிடிக்க கூண்டு வைக்கப்பட்டது.
இந்த நிலையில் நேற்று கூட வனத்துறை அலுவலகத்தின் முன்பு உள்ள நிலத்தில் மேய்ந்து கொண்டிருந்த பசு மாட்டை புதரில் மறைந்து இருந்த சிறுத்தை கடித்து கொன்றது. பகலிலும் சிறுத்தை கால்நடைகளை வேட்டையாட தொடங்கியதால் பொதுமக்கள் வெளியே நடமாட முடியாமல் அச்சத்தில் இருந்தனர்.
இந்த நிலையில் ஆசனூர் வனத்துறையினர் கூண்டு வைத்து சிறுத்தை நடமாட்டத்தை கண்காணித்து வந்தனர் இன்று காலை அரேப்பாளையம் பகுதியில் வனத்துறையினர் வைத்த கூண்டில் சிறுத்தை சிக்கியது.
தற்போது கூண்டில் சிக்கி உள்ள சிறுத்தையை சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட அடர்ந்த வனப்பகுதியில் விடுவிக்க வனத்துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாகவும், வேறு அடர்ந்த வனப்பகுதிக்குள் விடுவிக்கப்படும் எனவும் வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆசனூர் சுற்றுவட்டார பகுதிகளில் மனிதர்கள், கால்நடைகளை தொடர்ந்து வேட்டையாடி வந்த சிறுத்தை கூண்டில் சிக்கி உள்ளதால் அப்பகுதி பொதுமக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.