

போடி அடுத்துள்ள சாம்பலாறு, குரங்கணி, கொட்டக்குடி, பிச்சாங்கரை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது.
தேனி உள்பட தமிழகத்தில் 17 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்ைக விடுக்கப்பட்ட நிலையில் நேற்று மாவட்டத்தின் பல பகுதிகளில் மழை வெளுத்து வாங்கியது.
போடி அடுத்துள்ள சாம்பலாறு, குரங்கணி, கொட்டக்குடி, பிச்சாங்கரை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் கொட்டக்குடி, குரங்கணி, கொம்புதூக்கி ஆறுகளில் நீர்வரத்து அதிகரித்தது. அணைப்பிள்ளையார் தடுப்பணை நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காணரமாக பொதுமக்கள் ஆற்றின் கரையோரம் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. கால்நடைகளையும் பத்திரமாக பார்த்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழக-கேரள எல்லைப்பகுதியை இணைக்கும் போடி மெட்டு மலைச்சாலையில் 11-வது கொண்டை ஊசி வளைவில் கனமழை காரணமாக நள்ளிரவு 1 மணி அளவில் மண் சரிவு ஏற்பட்டது. இதனால் கேரளா செல்லும் அனைத்து வாகனங்களும் நிறுத்தப்பட்டன. கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு வரும் வாகனங்களும் பாதியிலேயே நிறுத்தப்பட்டது.
குரங்கணி போலீசார் நெடுஞ்சாலையத்துறையினருடன் தொடர்பு கொண்டு இரவோடு இரவாக ஜே.சி.பி. எந்திரம் வரவழைக்கப்பட்டு மண் சரிவு அகற்றப்பட்டது. அதன்பிறகு வாகனங்கள் மெதுவாக செல்ல அறிவுறுத்தப்பட்டன. இதேபோல் குமுளி மலைச்சாலையிலும் மண் சரிவு ஏற்பட்டது. தற்போது பரவலாக கனமழை பெய்து வரும் நிலையில் இரவு நேரங்களில் மலைச்சாலையில் பயணம் மேற்கொள்வதை தவிர்க்குமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
போடிமெட்டு மலைச்சாலையில் 17 ஆபத்தான கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. தரைமட்டத்தில் இருந்து 4850 அடி உயரம் உள்ள இந்த சாலையில் மழைக்காலங்களில் பயணம் மேற்கொள்வது ஆபத்தான விசயமாகும். நேற்று இரவு சுண்டல் பகுதியில் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அப்போது அவ்வழியாக வந்த கார் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. ஒரு வழியாக கார் சாலையோரம் இருந்த ஒரு மரத்தின்மீது மோதி நின்றது. அதன்பிறகு காரில் இருந்த பயணிகள் அதிர்ஷ்டவசமாக வெளியே வந்தனர்.
நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் இன்று காலையில் காரை மீட்டு சாலைப்பகுதிக்கு கொண்டு வந்தனர். தமிழக, கேரள சோதனைச்சாவடிகளில் இரவு நேரப்ப யணம் மேற்கொள்ளும் வாகனங்களுக்கு உரிய வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்பட்டு வருகின்றன. எனவே போடிமெட்டு, குமுளி, கம்பம்மெட்டு உள்ளிட்ட மலைச்சாலைகளில் எச்சரிக்கையுடன் பயணம் செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.