தொடர்மழையால் மண்சரிவு- அந்தரத்தில் தொங்கும் வீடுகளால் மக்கள் அச்சம்

கனரக எந்திரங்கள் பயன்பாடு நடப்பதாலும், கட்டுமானப் பணிகள் விதிகளை மீறி மேற்கொள்வதாலும் இது போன்ற நிலச்சரிவு ஏற்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
அந்தரத்தில் தொங்கும் வீடுகளை படத்தில் காணலாம்.
அந்தரத்தில் தொங்கும் வீடுகளை படத்தில் காணலாம்.
Published on: 
Summary

நிலச்சரிவு ஏற்படும் பகுதிகளை கண்டறிந்து முன்னேற்பாடு நடவடிக்கைகளை மேற்கொள்ள பேரிடர் மேலாண்மைத்துறை அறிவுறுத்தியுள்ளது. ஆனால் அதனை கண்டு கொள்ளாமல் நிலச்சரிவு ஏற்படும் பகுதிகளில் கட்டுமானப்பணிகள் மேற்கொள்வதால் பொதுமக்கள், வியாபாரிகள் பீதியடைந்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கடந்த சில நாட்களாக கனமழையும் அவ்வப்போது சாரல் மழையும் பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.

நிலச்சரிவு

கொடைக்கானல் நகரின் முக்கிய குடியிருப்பான சீனிவாசபுரம் முத்து மாரியம்மன் கோவில் பகுதியில் எல்.ஐ.சி. முகவர் ரவி மற்றும் அவரது சகோதரர் மணி ஆகியோர் அடுத்தடுத்து தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். நள்ளிரவு அப்பகுதியில் மழை நீர் புகுந்ததால் மண் சரிவு ஏற்பட்டது. இதில் கற்கள், மரம், செடி, கொடிகள் என அனைத்தும் நீரில் அடித்துச் சென்று சாலையை மறைத்தது.

மண்சரிவு

ரவி மற்றும் மணி ஆகியோரின் வீட்டு முன்பு மிகப்பெரிய நிலச்சரிவு ஏற்பட்டதால் வீடுகள் அந்தரத்தில் தொங்குவது போல காட்சியளிக்கிறது. இன்னும் ஒரு அடி தள்ளி சரிவு ஏற்பட்டு இருந்தால் குடும்பத்தினருக்கு பெரிய இழப்பு ஏற்பட்டு இருக்கும். பொருட்களும் மண்ணில் புதைந்திருக்கும். இதனால் வீட்டில் குடியிருந்தவர்கள் அச்சத்துடன் வெளியேறி வேறு பகுதியில் தஞ்சமடைந்துள்ளனர். தீயணைப்பு துறையினர் மண்சரிவு ஏற்பட்ட பகுதியை பார்வையிட்டு சீரமைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். மழை தொடர்ந்து பெய்வதால் மீண்டும் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

கனரக வாகன பயன்பாடு

இப்பகுதியில் கனரக எந்திரங்கள் பயன்பாடு நடப்பதாலும், கட்டுமானப்பணிகள் விதிகளை மீறி மேற்கொள்வதாலும் இது போன்ற நிலச்சரிவு ஏற்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். கொடைக்கானலில் நீர்நிலைகள் மற்றும் விவசாய நிலங்களை அழித்து சாலை அமைக்கப்படுகிறது. வில்பட்டி ஊராட்சியில் இது போன்ற விதிமீறல்கள் அதிகம் நடக்கிறது. இதன் காரணமாகவே கொடைக்கானலில் குடிநீர் தட்டுப்பாடும் ஏற்படுகிறது. கோட்டாட்சியர் உள்பட வருவாய்த்துறையினர் இது போன்ற பணிகளை ஆய்வு செய்கிறார்களா? என்ற சந்தேகம் வருவதாகவும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

கொடைக்கானலில் நிலச்சரிவு

ஏற்கனவே கொடைக்கானலில் நிலச்சரிவு ஏற்படும் பகுதிகளை கண்டறிந்து முன்னேற்பாடு நடவடிக்கைகளை மேற்கொள்ள பேரிடர் மேலாண்மைத்துறை அறிவுறுத்தியுள்ளது. ஆனால் அதனை கண்டு கொள்ளாமல் நிலச்சரிவு ஏற்படும் பகுதிகளில் கட்டுமானப்பணிகள் மேற்கொள்வதால் பொதுமக்கள், வியாபாரிகள் பீதியடைந்துள்ளனர். எனவே அதிகாரிகள் உரிய ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com