குமரி அரசு கல்லூரிகளில் உள்கட்டமைப்பு குறைபாடு: சிறப்புக் குழு அமைக்க விஜய் வசந்த் எம்.பி. கோரிக்கை

ரூ 2 கோடி 48 லட்சம் கல்லூரி பயிலும் மாணவ, மாணவிகளுக்கு கல்வி கடன் வழங்கப்பட்டது.
CongressMP Vijay vasanth
Published on: 
Summary

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அரசு கல்லூரிகளில் நிலவும் அடிப்படை உள்கட்டமைப்பு குறைபாடுகளை உடனடியாக நிவர்த்தி செய்யும் வகையில், மாவட்ட அளவில் ஒரு சிறப்புக் குழு அமைக்கப்பட வேண்டும் என்று விஜய் வசந்த் எம்.பி. கோரிக்கை விடுத்துள்ளார்.

நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி , தென்காசி ஆகிய 4 மாவட்ட கல்லூரி முதல்வர்கள் , நிர்வாகிகள் மற்றும் மாணவ மாணவிகளுடன் கலந்துரையாடல் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஆனந்தமோகன் தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் ரூ 2 கோடி 48 லட்சம் கல்லூரி பயிலும் மாணவ, மாணவிகளுக்கு கல்வி கடன் வழங்கப்பட்டது.

இதில் உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் கலந்து கொண்டு மாணவ மாணவிகளுடன் கலந்துரையாடினார். கல்லூரி முதல்வர்களிடம் கல்லூரிக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.

இந்தநிகழ்வில் கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த் கலந்து கொண்டு பேசியதாவது:-

கன்னியாகுமரி மாவட்டத்தில் இயங்கி வரும் பல அரசு கல்லூரிகளில் மாணவ-மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் அடிப்படைத் தேவையான காம்பவுண்ட் சுவர்கள் கூட இல்லாத அவல நிலை நீண்ட காலமாக நீடித்து வருகிறது. இது உடனடியாக சரிசெய்யப்பட வேண்டும்.

அதேபோல், பெரும்பாலான கல்லூரிகளில் போதிய வகுப்பறைகள், சுகாதாரமான கழிப்பறை வசதிகள், நவீன உபகரணங்களுடன் கூடிய ஆய்வகங்கள் மற்றும் விளையாட்டு மைதானங்கள் போன்ற அடிப்படை வசதிகளில் பெரும் பற்றாக்குறை நிலவுகிறது.

இவற்றை உடனடியாக மேம்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயம். கல்லூரிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். கல்வி தடையின்றி கிடைக்க நிரந்தரப் பேராசிரியர்களை நியமிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், தற்போது பணியாற்றி வரும் தற்காலிகப் பணியாளர்களுக்கு உரிய ஊதியம் காலதாமதமின்றி வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். மைதானங்கள் பல இடங்களில் பராமரிப்பின்றி பாழடைந்து கிடப்பதால், விளையாட்டு மைதானங்களைப் பராமரிக்க பிரத்யேகக் குழுக்கள் அமைக்கப்பட வேண்டும்.

கிராமப்புறங்களில் இருந்து கல்லூரிகளுக்கு வந்து செல்லும் மாணவ-மாணவிகளுக்குப் போதிய பேருந்து வசதிகள் இல்லை. இதனால் மாணவர்கள் அச்சத்தோடும், பெரும் சிரமத்தோடும் கல்லூரிக்கு வந்து செல்கின்றனர். எனவே, மாணவர்களின் நலன் கருதி உரிய கூடுதல் போக்குவரத்து வசதிகளை உடனடியாக செய்து தர வேண்டும்.

தனியார் கல்வி நிறுவனங்களுக்கு நிகராக அரசு கல்லூரிகளின் கட்டமைப்பை மேம்படுத்தினால் மட்டுமே, அரசு கல்லூரிகளில் பயிலும் ஏழை, எளிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் சிறந்த கல்வியைப் பெற்று எதிர்காலத்தில் உயர்ந்த நிலையை அடைய முடியும்.

எனவே, மாவட்ட அளவில் ஒரு சிறப்புக் குழுவை அமைத்து, அனைத்து அரசு கல்லூரிகளிலும் உள்ள தேவைகளை விரிவாக ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். இந்தக் கோரிக்கைகள் தொடர்பாக துறை சார்ந்த உயர்கல்வித்துறை அமைச்சரை நேரில் சந்தித்து தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com