

கைதான ஏழுமலையை போலீசார் சேலம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். கைதான ஏழுமலை கூலிதொழிலாளி ஆவார்.
சேலம் மாவட்டம் ஓமலூர் அடுத்த வெள்ளாளப்பட்டி பகுதியை சேர்ந்தவர் அன்வர் பாஷா (வயது 55). த.வெ.க. உறுப்பினர். கட்டிட தொழிலாளியான இவருக்கு பானு என்ற மனைவியும், 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.
நேற்று காலை வெள்ளாளப்பட்டி பஞ்சாயத்து அலுவலகம் முன்பாக மக்கள் நடமாட்டம் மிகுந்த சாலையில் வைத்து அன்வர் பாஷாவை வெள்ளாளப்பட்டி பழைய காலனி பகுதியை சேர்ந்த ஏழுமலை (50) என்பவர் கத்தியால் வெட்டி கொலை செய்தார். இதை அறிந்த அன்வர் பாஷா உறவினர்கள், பொதுமக்கள் சம்பவ இடத்தில் திரண்டனர். அன்வர் பாஷா உடலை போலீசார் எடுக்க விடாமல் உடலை நடுரோட்டில் வைத்து அவர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
மேலும் அவர்கள் கொலையாளியை கைது செய்ய கோரியும், வெள்ளாளப்பட்டி தனியார் மது பாரை மூடகோரியும் வலியுறுத்தினர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது. மேலும் பதட்டமும், பரபரப்பும் ஏற்பட்டது.
இதனால் ஓமலூர் வருவாய்துறை அதிகாரிகள் பிரச்சினைக்குரிய அந்த தனியார் மதுபாரை மூடி சீல் வைத்தனர். மேலும் அதன் மின் இணைப்பை துண்டித்த அதிகாரிகள் சட்டவிரோதமாக பாரை திறந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தனர். இருப்பினும் மதுபாரை நிரந்தரமாக மூடுவதாக மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் எழுத்துப்பூர்வமாக கடிதம் தரவேண்டும் எனக் கூறி பொதுமக்கள் போராட்டத்தை தொடர்ந்தனர்.
இறுதியாக மதுபாரை நிரந்தரமாக மூடப்படும் என்பதற்கான எழுத்துப்பூர்வ கடிதத்தை அதிகாரிகள் வழங்கினர். இதையடுத்து பொதுமக்கள் சமாதானம் அடைந்து போராட்டத்தை கைவிட்டனர். இதனால் சுமார் 4 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த போராட்டம் முடிவுக்கு வந்தது.
இந்த நிலையில் கொலையாளி ஏழுமலை கருப்பூர் போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார். அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இன்ஸ்பெக்டர் தேவராஜன் தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
அப்போது கொலைக்கான காரணம் குறித்து ஏழுமலை போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்தார். அதன் விபரம் வருமாறு:-
கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு வெள்ளாளப்பட்டி தனியார் மதுபான பாரில் எனக்கும், அன்வர் பாஷாவுக்கும் தகராறு ஏற்பட்டது. அப்போது வாய் தகராறு முற்றி கைகலப்பில் முடிந்தது.
இதனால் தொடர்ந்து விரோதம் இருந்து வந்தது. அவ்வபோது மோதலும் ஏற்பட்டு வந்தது. பின்னர் எங்கள் இருவரையும் அப்பகுதியினர் தடுத்து நிறுத்தி பிரச்சனைகள் வேண்டாம் என தெரிவித்தனர். அதன்படி நான் அவரிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டேன். எந்த பிரச்சனையிலும் ஈடுபடமாட்டேன் என மன்றாடி தெரிவித்தேன். இருப்பினும் அன்வர் பாஷா அப்பகுதியில் என்னை பார்க்கும் பொழுது ஒருமையில் திட்டினார். மேலும் முறைத்துக் கொண்டே செல்வார். இருந்தாலும் பிரச்சனைகள் வேண்டாம் என்று நான் ஒதுங்கிக் கொண்டேன்.
இந்த நிலையில் நேற்று காலையில் வெள்ளாளப்பட்டி ஊராட்சி மன்ற அலுவலகம் எதிரே நானும், அன்வர் பாஷாவும் வந்தபோது ஒருவருக்கொருவர் திட்டிக் கொண்டோம். இதில் அங்குள்ள கறிக்கடை அருகே அன்வர் பாஷா என்னை தாக்க முயற்சி செய்தபோது நான் கறிக்கடையில் இருந்த கத்தியை எடுத்து தடுக்க முயற்சி செய்தேன். மேலும் ஆத்திரத்தில் நீயா, நானா பார்த்திடலாமா என கூறி அன்வர் பாஷா தலைபின்பக்கம் கழுத்து, முன்பக்கம் கழுத்தில் நான் வெட்டி விட்டேன். இதில் அவர் சுருண்டு விழுந்தார். கழுத்தில் இருந்து ரத்தம் குபு குபுவென வெளியேறியதை கண்டதும் நான் அங்கிருந்து பயத்தில் ஓடி விட்டேன். பின்னர் கூட்டம் அதிகமாக கூடியதால் நான் கருப்பூர் போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தேன்.
இவ்வாறு ஏழுமலை போலீசாரிடம் வாக்குமூலம் அளித்தார்.
கைதான ஏழுமலையை போலீசார் சேலம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். கைதான ஏழுமலை கூலிதொழிலாளி ஆவார். அவருக்கு மனைவி மற்றும் 2 மகனகள், 2 மகள்கள் உள்ளனர்.