வெளிநாட்டு ஆர்டர்கள் குவியும் திருப்பூரில் தொழிலாளர் பற்றாக்குறை - பெண் தொழிலாளர்கள் ஆதிக்கம் அதிகரிப்பு!

தொழிலாளர் தட்டுப்பாட்டால் தவிக்கும் பின்னலாடை நிறுவனங்கள் இலவச தங்குமிடம் உணவு காப்பீடு வழங்கி ஆட்களை ஈர்க்கின்றன.
Garment Industry
Published on
Summary

​‘தொழில் நகரம்’, ‘டாலர் சிட்டி’ என உலக அளவில் புகழ்பெற்ற திருப்பூர் மாவட்டத்தில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பின்னலாடை தயாரிப்பு நிறுவனங்களும், சாயமேற்றல், அச்சிடுதல், தையல், அயர்னிங், பேக்கிங் என அதைச் சார்ந்த பல்லாயிரக்கணக்கான துணை நிறுவனங்களும் இயங்கி வருகின்றன.

வடமாநில தொழிலாளர்கள் பங்களிப்பு

இந்த நிறுவனங்களை நம்பி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த தொழிலாளர்களும், பீகார், ஒடிசா, உத்தரப் பிரதேசம் போன்ற வடமாநிலங்களைச் சேர்ந்த பல லட்சம் தொழிலாளர்களும் திருப்பூரின் பல்வேறு பகுதிகளில் தங்கி, இரவு பகலாகச் சுழன்று பணியாற்றி வருகிறார்கள்.

திருப்பூரின் இந்த அபார வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக விளங்குவது உலகளவில் இங்கிருந்து ஏற்றுமதி செய்யப்படும் உயர்தர பருத்தி ஆடைகளும், அதை உருவாக்கும் உழைப்பாளர்களின் கைகளுமே ஆகும்.

ஏற்றுமதி ஆர்டர்கள் குவிப்பு

​தற்போது சர்வதேச அளவில் வங்கதேசம், இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் நிலவி வரும் அரசியல் மற்றும் பொருளாதாரச் சூழல்கள் காரணமாகவும், இந்தியா பல்வேறு மேலை நாடுகளுடன் மேற்கொண்டு வரும் வர்த்தக ஒப்பந்தங்கள் காரணமாகவும், வெளிநாடுகளில் இருந்து திருப்பூருக்கு ஆடை தயாரிப்பு ஆர்டர்கள் பெருமளவில் குவித்து வருகின்றன.

குறிப்பாக ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்காவில் இருந்து பனியன், டீ-சர்ட் உள்ளிட்ட ஆடைகளுக்கான தேவை கணிசமாக அதிகரித்துள்ளது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு திருப்பூருக்குக் கிடைத்துள்ள இந்த பொன்னான வாய்ப்பைப் பயன்படுத்தி உற்பத்தியைப் பெருக்க நிறுவனங்கள் தீவிரமாக முயற்சி செய்து வருகின்றன.

தொழிலாளர் தட்டுப்பாடு சிக்கல்

ஆனால், ஆர்டர்கள் குவிந்து வரும் நிலையில், அதற்குத் தேவையான போதிய தொழிலாளர்கள் இல்லாததால் உற்பத்தி நிறுவனங்கள் கடுமையான சிரமங்களைச் சந்தித்து வருகின்றன.

இதனால் கைவசம் உள்ள ஆர்டர்களை குறித்த காலத்தில் முடித்துக் கொடுக்க முடியாமல் ஆடை உற்பத்தியாளர்கள் திணறி வருகின்றனர்.

தொழிலாளர்கள் தட்டுப்பாட்டைப் போக்கவும், கையில் இருக்கும் தொழில் வாய்ப்புகளைத் தக்கவைத்துக் கொள்ளவும் பின்னலாடை நிறுவனங்கள் பல்வேறு கவர்ச்சிகரமான சலுகைகளை அறிவித்து வருகின்றன.

குறிப்பாக, தொழிலாளர்களுக்கு இலவசத் தங்குமிடம், மூன்று வேளை உணவு, தொழிலாளர் வைப்பு நிதி , மருத்துவக் காப்பீடு மற்றும் திறனுக்கேற்ற கூடுதல் சம்பளம் போன்ற சலுகைகள் வழங்கி புதிய தொழிலாளர்களை ஈர்க்கும் நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

மினி சண்டே

​இந்தச் சூழலில், ஆண் தொழிலாளர்களின் பணி முறை நிறுவனங்களுக்கு ஒரு புதிய சவாலாக மாறியுள்ளது.

சனிக்கிழமை தோறும் வாரம் சம்பளம் வாங்கிச் செல்லும் ஆண் தொழிலாளர்கள், ஞாயிற்றுக்கிழமை விடுமுறைக்குப் பிறகு திங்கட்கிழமையும் பணிக்கு வராமல் விடுப்பு எடுப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். திருப்பூரில் இது ‘மினி சண்டே’ என்றே அழைக்கப்படுகிறது.

பெண் தொழிலாளர்கள் ஆதிக்கம்

வாரத்தின் முதல் நாளிலேயே தொழிலாளர்கள் வராததால் உற்பத்தி பாதிக்கப்பட்டு, குறித்த நேரத்தில் ஆர்டர் துணிகளை வெளிநாடுகளுக்கு அனுப்ப முடியாமல் கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்து திட்டமிடலில் தாமதம் ஏற்படுகிறது.

​இதன் காரணமாக, தற்போது பின்னலாடை நிறுவனங்கள் பெண் தொழிலாளர்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கத் தொடங்கியுள்ளன.

பெண் தொழிலாளர்கள் குறிப்பிட்ட நேரத்தில் பணிக்கு வருவதுடன், பணி நேரத்தில் கவனச்சிதறல் இன்றி நேர்த்தியாகப் பணியாற்றுகின்றனர். தையல் , அயர்னிங் , செக்கிங் , பேக்கிங் என அனைத்துப் பிரிவுகளிலும் பெண் தொழிலாளர்களின் ஆதிக்கம் தற்போது அதிகரித்து வருகிறது.

பெண்களுக்கு இலவச பயிற்சி

எனவே, தமிழகத்தின் தென் மாவட்டங்கள் மற்றும் பிற கிராமப்புறப் பகுதிகளில் உள்ள பெண் தொழிலாளர்களை ஈர்க்கும் வகையில் தொழில் நிறுவனங்கள் நேரடியாகக் களம் இறங்கியுள்ளன.

வேலைவாய்ப்புத் தேடி வரும் பெண்களுக்குத் தையல் அல்லது அயர்னிங் வேலை செய்யத் தெரியவில்லை என்றாலும் கவலையில்லை என்ற நிலையை நிறுவனங்கள் உருவாக்கியுள்ளன.

தங்கும் வசதியுடன் இலவசப் பயிற்சி அளித்து, பயிற்சி முடித்த கையோடு தகுதிக்கேற்ற சம்பளத்தில் பணி நியமனம் செய்யவும் நிறுவனங்கள் ஆயத்தமாக உள்ளன.

இதன் மூலம் கிராமப்புறப் பெண்களின் வாழ்வாதாரம் உயர்வதுடன், திருப்பூரின் ஆடை உற்பத்தித் துறையும் தடையின்றி இயங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com