

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவையொட்டி நாளை (செவ்வாய்க்கிழமை) இரவு மகிஷாசூரசம்ஹாரம் நடைபெற உள்ளது. இதையொட்டி நேற்று முதல் பக்தர்கள் கோவிலில் குவிந்து வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் ஞானமூர்த்தீஸ்வரர் உடனுறை முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா கடந்த 11-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதையொட்டி மாலையணிந்து விரதம் இருக்கும் பக்தர்கள் நேர்த்திக்கடனாக காளி, முருகன், அம்மன் உள்ளிட்ட பல்வேறு வேடங்களை அணிந்து, ஊர், ஊராக சென்று காணிக்கை வசூலிக்கின்றனர்.
8-ம் திருநாளான நேற்று காலை முதல் இரவு 7.30 மணி வரை சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. இரவு 10 மணிக்கு அன்ன வாகனத்தில் கலைமகள் திருக்கோலத்தில் முத்தாரம்மன் வீதிஉலா வந்தார்.
விழாவின் சிகர நிகழ்ச்சியான அம்மன் சிம்ம வாகனத்தில் மகிஷாசூரனை வதம் செய்யும் மகிஷாசூரசம்ஹாரம் நாளை (செவ்வாய்க்கிழமை) நள்ளிரவு 12 மணிக்கு சிதம்பரேஸ்வரர் கடற்கரை வளாகத்தில் நடைபெறுகிறது.
11-ம் திருவிழாவான நாளை மறுநாள் (புதன்கிழமை) அதிகாலை 1 மணிக்கு சூரசம்ஹாரம் முடிந்தவுடன் கடற்கரை மேடைக்கு அம்மன் எழுந்தருளி அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகிறது.
அதிகாலை 3 மணிக்கு அம்மன் திருத்தேரில் பவனி வரும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. 6 மணிக்கு பூஞ்சப்பரத்தில் அம்மன் திருவீதி உலா புறப்பட்டு மாலை 4 மணிக்கு கோவில் வந்து சேர்கிறார்.
மாலை 4.30 மணிக்கு காப்பு களைதல், நள்ளிரவு 12 மணிக்கு சேர்க்கை அபிஷேகம் நடைபெறுகிறது. 12-ம் திருவிழாவான 22-ந் தேதி காலை 6 மணி, 8 மணி, 10 மணிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று மதியம் 12 மணிக்கு சிறப்பு பாலாபிஷேகம், புஷ்ப அலங்காரம், அன்னதானம் ஆகியவை நடைபெறுகின்றன.
சூரசம்ஹாரத்தையொட்டி நேற்று காலை முதலே தமிழகம் மட்டுமல்லாது, மும்பை, கேரளம், கர்நாடகா மற்றும் பல்வேறு பகுதிகளிலில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் குவிந்து வருகின்றனர். இதனால் தசரா திருவிழா களைகட்டி வருகிறது.