விலைவாசி உயர்வை கட்டுபடுத்த த.வெ.க. அரசு முன்வர வேண்டும்- கரு.நாகராஜன்

தி.மு.க. அரசு ரூ.21க்கு கொள்முதல் செய்த மின்சாரத்தை த.வெ.க. அரசு ரூ.35க்கு டெண்டர் கோரியுள்ளது.
விலைவாசி உயர்வை கட்டுபடுத்த த.வெ.க. அரசு முன்வர வேண்டும்- கரு.நாகராஜன்
Published on: 

தமிழகத்தில் த.வெ.க. அரசு அமைந்த பிறகு அரிசி, காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. எதற்கெடுத்தாலும் தி.மு.க. மீது பழி போடுவதை நிறுத்தி விட்டு விலைவாசி உயர்வை கட்டுபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வீ த லீடர்ஸ் அமைப்பின் பொதுச்செயலாளர் கரு. நாகராஜன் தேனியில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

அரசியல் இயக்கம்

வீ த லீடர்ஸ் அமைப்பு அரசியல் இயக்கமாக மாறி உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட உள்ளோம். எஸ்.ஐ.ஆரில் குளறுபடி நடந்ததாக காங்கிரஸ் மற்றும் எதிர்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. குளறுபடி நடந்திருந்தால் தமிழகத்தில் விஜய், கேரளாவில் காங்கிரஸ் எவ்வாறு வெற்றி பெற முடியும்? பா.ஜ.க. குறைந்த இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.

அரசியல் காரணங்களுக்காக தங்கள் மீது உள்ள குறைகளை மறைத்து ராகுல்காந்தி கதறுகிறார். தமிழகத்தில் தினந்தோறும் கொலை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. கொலை வழக்குகளில் சிறுவர்கள் அதிகம் கைதாகி வருகின்றனர். தி.மு.க. அரசு ரூ.21க்கு கொள்முதல் செய்த மின்சாரத்தை த.வெ.க. அரசு ரூ.35க்கு டெண்டர் கோரியுள்ளது. இது மிகப்பெரிய ஊழல். செயற்கை மின் தட்டுப்பாட்டை ஏற்படுத்தி மின்சார கொள்முதல் நடைபெறுகிறதோ? என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

விலைவாசி உயர்வு

தமிழகத்தில் த.வெ.க. அரசு அமைந்த பிறகு அரிசி, காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. எதற்கெடுத்தாலும் தி.மு.க. மீது பழி போடுவதை நிறுத்தி விட்டு விலைவாசி உயர்வை கட்டுபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். தண்ணீர் பிரச்சினை, நதி நீர் இணைப்பு குறித்து பேசுவதற்கு முதல்வர் விஜய் ஆந்திரா சென்றதுபோல கேரளாவுக்கும், கர்நாடகாவுக்கும் செல்ல வேண்டும். முல்லைப்பெரியாறு அணையில் பராமரிப்பு பணிக்கு இன்னும் நம்மை அனுமதிப்பதில்லை. கேரள மந்திரிகள் மட்டும் ஆய்வுக்கு செல்கின்றனர். தி.மு.க. - கம்யூனிஸ்டு கூட்டணி கட்சிகளாக இருந்தபோது அணையின் நீர்மட்டத்தை உயர்த்துவது குறித்து பேசவில்லை. எனவே தற்போது த.வெ.க. - காங்கிரஸ் கூட்டணியில் இருப்பதால் கேரளாவுக்கு சென்று முதல்வர் விஜய் பேச வேண்டும். அதே போல் கர்நாடகாவுக்கு சென்று மேகதாது அணை கட்டக்கூடாது என அம்மாநில முதல்வர் சிவக்குமாரை வலியுறுத்த வேண்டும்.

மத்திய அமைச்சர் பதவியில் இருந்து எல்.முருகன் ராஜினாமா செய்தது அவரது தனிப்பட்ட முடிவு. பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் அமைக்கும் முடிவை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com