

விஜய் சேதுபதி பேசுவதால் மட்டும் அரசியலில் எந்த மாற்றமும் ஏற்படப் போவதில்லை. இந்த அரசின் செயல்பாடுகளை மக்கள் நேரடியாக பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். மக்களிடம் சென்று அவர்களின் குறைகளை கேட்டறிந்து, அவற்றுக்கு தீர்வு காண்பதே எங்களுடைய முக்கிய நோக்கம் என்று கனிமொழி சந்தோஷ் தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் செரையம்பாளையம் - நீலாம்பூர் இடையே மீண்டும் பேருந்து சேவை தொடங்கப்பட்ட நிகழ்ச்சிக்குப் பின்னர், தொகுதியில் மேல்நிலைப் பள்ளி அமைப்பது மற்றும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடிகர் விஜய் சேதுபதி தெரிவித்த கருத்துகள் குறித்து எம்.எல்.ஏ. கனிமொழி சந்தோஷ் செய்தியாளர்களிடம் பதிலளித்தார். அதன் விவரம் வருமாறு:-
செரையம்பாளையம் பகுதியில் மேல்நிலைப் பள்ளி அமைக்க வேண்டும் என்ற பொதுமக்களின் கோரிக்கை குறித்து பேசிய அவர்,
“மாணவர்களின் எண்ணிக்கையை முழுமையாகக் கணக்கில் எடுத்துக்கொண்டு, அதற்கான முக்கியத்துவத்தை வழங்குவோம். அந்தப் பகுதியில் மேல்நிலைப் பள்ளி கொண்டு வருவதற்கான முயற்சிகளை நிச்சயமாக மேற்கொள்வோம்” என்றார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி தெரிவித்த தலைமைத்துவம் தொடர்பான கருத்துகள் அரசியல் விவாதமாக மாறியது குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது,
“பிக் பாஸ் என்பது ஒரு கேளிக்கை நிகழ்ச்சி. ஜனநாயக நாட்டில் அரசியல் விமர்சனம் செய்வதற்கான கருத்துரிமை அனைவருக்கும் இருக்கிறது. யார் வேண்டுமானாலும் விமர்சனம் செய்யலாம்” என்று தெரிவித்தார்.
மேலும் பேசிய கனிமொழி சந்தோஷ்,
“குறிப்பிட்ட ஒரு கட்சியின் மீது குற்றச்சாட்டு வைக்க வேண்டும் என்றால், அந்தக் கட்சியின் பெயரை குறிப்பிட்டு பேசலாம். எங்கள் தலைவர் விஜய் அவர்களின் பெயரை குறிப்பிட்டு பேசட்டும். அதற்கு மக்கள் தங்களுடைய பதிலைச் சொல்வார்கள்.”
“ஒரு நிகழ்ச்சியில் பொதுவாக பேசப்படும் கருத்துகளை அரசியல் ரீதியாக மக்கள் எப்படி எடுத்துக்கொள்கிறார்கள் என்பது வேறு விஷயம். ஆனால், அரசியல் விமர்சனம் என்றால் அது வெளிப்படையாக இருக்க வேண்டும்” என்றார்.
மேலும் அவர், “விஜய் சேதுபதி பேசுவதால் மட்டும் அரசியலில் எந்த மாற்றமும் ஏற்படப் போவதில்லை. இந்த அரசின் செயல்பாடுகளை மக்கள் நேரடியாக பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். மக்களிடம் சென்று அவர்களின் குறைகளை கேட்டறிந்து, அவற்றுக்கு தீர்வு காண்பதே எங்களுடைய முக்கிய நோக்கம்.”
“இந்த அரசு வெளிப்படைத்தன்மையுடன் செயல்பட்டு வருகிறது. மக்களின் தேவைகள் என்ன என்பதை அறிந்து, அதற்கேற்ப திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். கவுண்டம்பாளையம் தொகுதியிலும் நீண்ட நாட்களாக தீர்வு காணப்படாமல் இருந்த கோரிக்கைகள் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்பட்டு வருகின்றன” என்றார்.
“அரசியலில் யார் வேண்டுமானாலும் கருத்து சொல்லலாம். ஆனால் இறுதியில் மக்கள் எதை உண்மை என்று ஏற்றுக்கொள்கிறார்கள் என்பதுதான் முக்கியம். மக்கள் நேரடியாக காணும் செயல்பாடுகளின் அடிப்படையில்தான் தங்களது முடிவுகளை எடுப்பார்கள்” என்று கனிமொழி சந்தோஷ் தெரிவித்தார்.