

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு ஆபாசமான செய்திகளை அனுப்பியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், தவெக சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை திருப்பூர் காவல் கண்காணிப்பாளர் சிருஷ்டி சிங் விசாரிப்பார் என்றும், இந்த விசாரணையை ஐஜி காமினி மேற்பார்வையிடுவார் என்றும் உயர் நீதிமன்றத்தில் அரசு குற்றவியல் வழக்கறிஞர் ஜான் சத்யன் தெரிவித்துள்ளார்.
குற்றம் சாட்டப்பட்டவர் ஒரு சட்டமன்ற உறுப்பினர் என்பதால், ஐஜி அளவிலான அதிகாரி ஒருவர் விசாரணையை கண்காணிக்க வேண்டும் என்றும், விசாரணை அதிகாரி மற்றும் விசாரணையை மேற்பார்வையிடும் அதிகாரி ஆகியோரின் பெயர்களை வழங்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
அருள் விக்னேஷ் மீது வழக்குப் பதிவு செய்யக் கோரி அதிமுக வழக்கறிஞர் திரிசூலி தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி வி. லட்சுமிநாராயணன் இந்த உத்தரவை பிறப்பித்திருந்தார்.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பத்மஜா அளித்த புகாரின் அடிப்படையில், கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ்மீது பாலியல் துன்புறுத்தல், பாலியல் சாயலுடைய கருத்து தெரிவித்தல், பாலியல் வற்புறுத்தல், பெண்ணை பின் தொடர்தல், அரசு ஊழியரை பணிசெய்ய விடாமல் தடுத்தல் ஆகிய 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.