உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தொடுக்கும் தனிநபர் தாக்குதல் என்றும் இது நீதித்துறை நெறிகளுக்கு முரணானது உரிய நடவடிக்கை எடுக்க தலைமை நீதிபதிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.
சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசனின் வாழ்க்கை முறை குறித்தும், நீதித்துறை பணிகள் குறித்து அவர் தெரிவித்த விமர்சனங்கள் குறித்தும் நீதிமன்ற விசாரணையின் போது கருத்து தெரிவித்திருந்தார்.
கோவை பெரியார் அறிவுலகம் நூலகப் புத்தகக் கொள்முதல் முறைகேடு வழக்கில், பாவத்தைப் போக்க ஆன்மிகப் புத்தகங்களை வைக்க வேண்டும் எனத் தான் ஒரு விழாவில் நகைச்சுவையாகக் கூறியதை சு. வெங்கடேசன் விமர்சித்ததற்கு நீதிபதி பதிலளித்தார். ஒரு நீதிபதியாகத் தான் எவ்வாறு செயல்பட வேண்டும் என்று அவர் தனக்குப் பாடம் எடுக்கத் தேவையில்லை என நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் கருத்து கூறியிருந்தார்.
இந்த நிலையில் இது நீதித்துறை நெறிகளுக்கு முரணானது உரிய நடவடிக்கை எடுக்க தலைமை நீதிபதிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது. இது குறித்து சிபிஎம் மாநில தலைவர் பெ. சண்முகம் தனது சமூகவலைதள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது
உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் நீதித் துறை நெறிகளுக்கும், மாண்புகளுக்கும் முரணாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தோழர் சு.வெங்கடேசன் அவர்களுக்கு எதிராக தனி நபர் தாக்குதலை தொடுத்துள்ளார்.
நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் இத்தகைய கருத்துக்களை வெளியிடுவது முதன் முறையல்ல. பொது வெளியில் தான் வகிக்கும் பொறுப்பின் மேன்மையை பயன்படுத்திக் கொண்டு அதனை சீர் கெடச் செய்யும் வகையில் அவரது கருத்துக்கள் அமைந்து வருகின்றன. சாதிய எண்ணம் மேலோங்கும் அவரது பல உரைகள் ஏற்கனவே சர்ச்சைக்கு ஆளாகியுள்ளன.
கோவை நூலகத்தில் இடம் பெற்ற போலி நூல்கள் பற்றி கருத்து தெரிவிக்கையில் 'பெரியார் அறிவுலகம்' என்று சொல்லப்படுகிற அந்த நூலகங்களின் அடுக்குகளில் எல்லாம், இதுபோன்ற 'அகல்விளக்கு' பதிப்பகத்தின் போலிப் புத்தகங்கள்தான் நிறைந்திருக்கின்றன. அந்தத் தவறுகளால் ஏற்பட்ட பாவமெல்லாம் கழிய வேண்டுமென்றால், இந்த மகாபெரியவா புத்தகத்தின் அனைத்துத் தொகுதிகளையும், அனைத்துப் பெரியார் அறிவுலக நூலகங்களின் அடுக்குகளிலும் இடம்பெறச் செய்ய வேண்டும்.
அப்படிச் செய்தால்தான் இந்தப் பாவமெல்லாம் நீங்கும் என்று நான் மனப்பூர்வமாக நம்புகிறேன்" என்று குறிப்பிட்டு இருந்தார். இந்த கருத்துக்குள் ஒளிந்திருக்கும் வர்ணாசிரம சார்பும், வன்மும் வெளிப்படையானது.
அதற்கு எதிர்வினையாற்றியசு.வெங்கடேசன் எம்.பி "நூலகக் கொள்முதலில் நடந்திருப்பது ஊழல், அது சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டும். அதுதான் நீதியரசர்களின் வேலை. நடந்திருப்பது பாவம், அதற்குப் புண்ணியம் செய்ய வேண்டும் என்று சொல்லுவது ஜோதிடர்களின் வேலை. சட்டத்தின் ஞானத்திற்காக அம்பேத்கரும், பகுத்தறிவின் ஞானத்திற்காக பெரியாரும் நாள்தோறும் நினைக்கப்படும் மகா பெரியவர்கள்" என்று கருத்தைப் பதிவு செய்தார்.
தாம் குறிப்பிட்ட கருத்து அபத்தமானது என்பதால் புத்தக வெளியீட்டு விழாவில் நகைச்சுவையாகத்தான் அந்த கருத்தை தெரிவித்தேன் என்று நீதிபதி சமாளித்து இருக்கிறார். அத்துடன் வழக்கு விசாரணையின் போது தேவையற்ற வகையில் ஒரு நாடாளுமன்ற உறுப்பினரை தனிப்பட்ட முறையில் விமர்சித்து அரசு வழங்கியுள்ள பயணச் சலுகையை கூட கொச்சைப்படுத்தியுள்ளார்
நீதிபதி நாற்காலியில் அமர்ந்து கொண்டு அவர் இவ்வாறு பேசியுள்ளது எவ்வகையிலும் ஏற்கத்தக்கதல்ல. அவர் ஏற்கனவே பலமுறை தன்னுடைய சொந்த கருத்தியல் அடிப்படையை ஒரு தலைபட்சமாக பேசிவருகிறார். இவர் இந்த பொறுப்பில் நீடிக்க தகுதியற்றவர் என்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டு ஏற்கனவே தகுதி நீக்க தீர்மான நோட்டீசை அளித்தது குறிப்பிடத்தக்கது.
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அரசு தந்துள்ள வசதிகளுக்கு உட்பட்டு அவர் செய்யும் பயணத்தை ஒரு நீதிபதி பழி சொல்வது அவரது உள்நோக்கத்தையும், அவர் வகிக்கும் அரசியல் சட்ட பொறுப்புக்கு பொருத்தமற்ற நடத்தையையும் வெளிப்படுத்துகிறது. இது நீதித்துறையின் மாண்புகளுக்கு எதிரானது.
நீதிமன்றத்திலேயே அவர் பேசி இருப்பது ஊடகங்களிலும் வெளி வந்திருப்பதால் அவர் மீது உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அவர்கள் உரிய நடவடிக்கை மேற்கொண்டு நீதித் துறை மீதான மக்களின் நம்பிக்கையையும், மாண்பையும் பாதுகாக்க வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயற்குழு கேட்டுக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்