

பேரணாம்பட்டு அருகே உள்ள ஏரிகுத்திமேடு பகுதியை சேர்ந்தவர் சுகைல் அகமது (வயது37), விவசாயி. இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது வீட்டை பூட்டி விட்டு வெளியூருக்கு சென்று விட்டார். இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் இருந்த ஒரு பவுன் தங்க நகை மற்றும் 150 கிராம் வெள்ளி நகை, 2 வாட்சுகளை திருடி சென்று விட்டனர். நேற்று முன்தினம் காலை மீண்டும் வீடு திரும்பிய சுகைல் அகமது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது நகை மற்றும் பொருட்கள் திருட்டுப் போனது தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின்பேரில் பேரணாம்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை கொண்டு திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.