

மொழி அடிப்படையில் மாநிலங்கள் பிரிக்கப்பட்டு 1956 நவம்பர் 1 அன்று மாநில மறுசீரமைப்பு சட்டம் அமல்படுத்தப்பட்டு தமிழ்நாடு மாநிலமாக உருவெடுத்துள்ளதை போற்றும் வகையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.
இந்தியாவின் எல்லைகள் மொழி அடிப்படையில் மறுசீரமைக்கப்பட்டு, மாநிலங்கள் மொழி வாரியாக பிரிக்கப்பட்டு 1956 நவம்பர் 1 மாநில மறுசீரமைப்பு சட்டம் நடைமுறைக்கு வந்தது.
இதனடிப்படையில் மலையாள மொழி பேசும் பாலக்காடு மற்றும் மலபார் ஆகிய மாவட்டங்கள் மெட்ராஸ் மாநிலத்தில் இருந்து பிரிக்கப்பட்டன.
அதேபோன்று கன்னட மொழி பேசும் மங்களூர் உள்ளிட்ட பகுதிகள் கர்நாடகா மாநிலத்திற்கு மாற்றப்பட்டன.
சென்னை மாநகரம் அகஸ்தீஸ்வரம், தோவாலை, கல்குளம் மற்றும் விதிவங்கோடு ஆகிய பகுதிகளை இணைத்துக்கொண்டது. மேலும் செங்கோட்டையை இணைத்து கன்னியாகுமரி மாவட்டம் உருவானது.
இதேபோன்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
உலகின் மூத்த மொழியாம் தமிழ் மொழியின் தொன்மையும், சங்க இலக்கியங்களின் செழுமையும், தமிழர் பண்பாட்டின் பெருமையும் போற்றி பாதுகாக்கும் பெருநிலமாம் நம் மாநிலம் நமக்கு அமைந்திட்ட வரலாற்று நாள் இன்று.
நவம்பர் 1-ஆம் நாளை தமிழ்நாடு நாளாக அறிவித்தது எனது தலைமையிலான அதிமுக அரசு என்ற பெருமிதத்துடன், தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது உளமார்ந்த தமிழ்நாடு நாள் நல்வாழ்த்துகளை உரித்தாக்குகிறேன்.
வீரத்திலும், அறிவிலும், கலை-பண்பாட்டிலும், சமூக-கல்வி-தொழில் முன்னேற்றத்திலும் சிறந்து விளங்கும் நம் தாய்த்தமிழ்நாடு, அனைத்து துறைகளிலும் மேலும் பல உயரங்களை தொட்டு,
உலக அரங்கில் தனிப்பெருமையுடன் திகழ்ந்திட, தமிழ் கூறும் நல்லுலகின் பிள்ளைகளாம் நாம் அனைவரும் ஓரணியாய் நின்று உழைப்போமென இந்நன்னாளில் உறுதியேற்போம்” என பதிவிட்டுள்ளார்.