இனியும் போர்கள் வேண்டாம்: ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதல் ஒரு பொறுப்பற்ற செயல்- மு.க.ஸ்டாலின்

இஸ்ரேல் ஆபரேஷன் ரைசிங் லயன் என்ற வான்வழித் தாக்குதலை ஈரான் மீது நடத்தியதுஇதற்குப் பதிலடியாக, ஈரான் "ஆபரேஷன் ட்ரூ பிராமிஸ்" என்ற பெயரில் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது.
இனியும் போர்கள் வேண்டாம்: ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதல் ஒரு பொறுப்பற்ற செயல்- மு.க.ஸ்டாலின்
Published on

ஈரான் அணுசக்தி திட்டங்கள் மற்றும் இராணுவத் தளபதிகளை குறிவைத்து இஸ்ரேல் நேற்று காலை ஆபரேஷன் ரைசிங் லயன் என்ற வான்வழித் தாக்குதலை நடத்தியது. இதில் 78 பேர் உயிரிழந்ததாகவும், 320 படுகாயமடைந்ததாகவும் ஈரான் ஐநா பிரதிநிதி தெரிவித்தார்.

ஈரானின் நடான்ஸ் அணுசக்தி செறிவூட்டும் வசதி, ஃபோர்டோ மற்றும் இஸ்ஃபஹான் அணு ஆராய்ச்சி நிலையங்கள் உள்ளிட்ட முக்கிய தளங்கள் தாக்கப்பட்டது. நடான்ஸ் 60% யுரேனியத்தை வளப்படுத்தும் திறன் கொண்டது. சேதமடைந்த அணுமின் நிலையத்திலிருந்து கதிர்வீச்சு குறித்து ரஷியா கவலை தெரிவித்துள்ளது

இந்நிலையில் இதற்கு பதிலடியாக இன்று காலை வரை, ஈரான் "ஆபரேஷன் ட்ரூ பிராமிஸ்" என்ற பெயரில் டெல் அவிவ் மற்றும் ஜெருசலேம் மீது ஏவுகணைகளை ஏவியது. இதில் ஒருவர் கொல்லப்பட்டு, 34 பேர் காயமடைந்தனர். ரிஷோன் லெசியோனில் நடத்தப்பட்ட தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டு 19 பேர் காயமடைந்தனர். இதனையடுத்து இரு நாடுகளும் மாறி மாறி வான்வழித் தாக்குதல்களை நடத்தின.

இந்நிலையில், இஸ்ரேலின் வன்முறை பாதை கண்டிக்கத்தக்கது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அவரது பதிவில், "ஈரான் மீது இசுரேல் தொடுத்து வரும் தாக்குதல்கள் பெரும் போரை மூளச் செய்யும் பொறுப்பற்ற செயலாகும். ஏற்கெனவே காசாவில் தொடர்ந்து குண்டுகளை வீசிப் பாலஸ்தீன மக்கள் அல்லலுற்று வரும் வேளையில் இஸ்ரேலின் இந்த வன்முறைப் பாதை கண்டிக்கத்தக்கது.

உலக நாடுகள் அனைத்தும் இதனைக் கட்டுப்படுத்தவும், நீதிக்கும், பொருள்பொதிந்த பேச்சுவார்த்தைக்கும் வலியுறுத்த வேண்டும். இனி வேண்டாம் போர்கள்!" என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com