

மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய தவெக எம்எல்ஏ மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என காவல்துறைக்கு நீதிபதி ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பத்மஜாவுக்கு தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் ஆபாச குறுஞ்செய்திகள் அனுப்பியதாக எழுந்த குற்றச்சாட்டு தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது.
கள்ளக்குறிச்சி ஆட்சியர் பத்மஜாவின் கணவரும் விழுப்புரம் ஆட்சியருமான ஷேக் அப்துல் ரஹ்மான் புகார் கடிதம் அளித்தார்.
ஆனால் அதன் மீது காவல்துறை இதுவரை நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்நிலையில் இந்த விவகாரத்தில் காவல்துறை நடவடிக்கை எடுக்காதது குறித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி எல். விக்டோரியா கௌரி கேள்வி எழுப்பியுள்ளார்.
மதுரை லேடி டோக் கல்லூரியில் நடைபெற்ற பணியிடப் பாலியல் துன்புறுத்தல் தடுப்புச் சட்டம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் நீதிபதி விக்டோரியா கௌரி கலந்துகொண்டு பேசினார்.
அப்போது அவர், “கள்ளக்குறிச்சி மாவட்டத்தை ஆட்சி செய்து கொண்டிருக்கக்கூடிய மாவட்ட ஆட்சியர் பத்மஜாவுக்கு, தற்போது இருக்கக்கூடிய எம்எல்ஏ ஒருவர் ஆபாச செய்தி அனுப்புகிறார்.
அப்படியென்றால், அது பணியிடத்தில் பெண்களுக்கு எதிரான துன்புறுத்தல் இல்லையா? அவருடைய கணவர் புகார் அளித்துள்ளார்.
இன்றுவரை மாநில அரசின் காவல்துறை ஏன் நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறது?” என நீதிபதி கேள்வி எழுப்பினார்.
மேலும் பணியிடங்களில் சக ஊழியர்கள் அனைவரும் இணக்கமாகவும், அன்புடனும், பாதுகாப்பாகவும், வசதியாகவும் பணியாற்றுவதற்கான சூழலை உருவாக்குவது குறித்த விழிப்புணர்வு அவசியம் என்றும் அவர் தெரிவித்தார்.
இதனிடையே இவ்விவகாரம் திமுக மற்றும் அதிமுக சார்பில் புகார்கள் அளிக்கப்பட்டதோடு, வழக்கின் மின்னணு ஆதாரங்களைப் பாதுகாக்கவும் எம்எல்ஏ மீது வழக்குப் பதிவு செய்யக் கோரியும் உயர்நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
தேசிய மகளிர் ஆணையமும் தமிழ்நாடு டிஜிபிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
முன்னதாக தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்திருந்தார். மேலும் இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு அடிப்படை இல்லை எனத் தமிழக சட்ட அமைச்சர் நிர்மல் குமார் மற்றும் ஆளும் தரப்பினர் மறுப்புத் தெரிவித்திருந்தனர்.