வாட்ஸ்-அப் மூலம் இளைஞர்களுக்கு மூளைச்சலவை: ஐ.எஸ். பயங்கரவாத இயக்க ஆதரவாளர் கைது

உத்தரபிரதேச மாநிலம் ஆசம்காத் என்ற இடத்தைச் சேர்ந்த முகமது நபீல் என்பவரை அந்த மாநில தீவிரவாத தடுப்பு படை பிரிவு போலீசார் கைது செய்தனர்.
வாட்ஸ்-அப் மூலம் இளைஞர்களுக்கு மூளைச்சலவை: ஐ.எஸ். பயங்கரவாத இயக்க ஆதரவாளர் கைது
Published on
Summary

வாட்ஸ்-அப்பில் குழுவை தொடங்கி வெளிநாட்டில் செயல்படும் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவாக ஆட்களை திரட்டிய ஆதரவாளர் கோவையில் கைது செய்யப்பட்டார்.

இந்தியாவில் அசம்பாவித சம்பவங்களை தடுக்கும் வகையில் பயங்கரவாத இயக்கங்கள் மற்றும் அவர்களுடன் தொடர்புடையவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்.

வாட்ஸ்-அப் குழு மூலம் மூளைச்சலவை

சமீபத்தில் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த சில வாலிபர்கள் வாட்ஸ்-அப் குழுவைத் தொடங்கி வெளிநாட்டில் செயல்படும் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவாக ஆட்களை திரட்டியது தெரியவந்தது. அந்த அமைப்பின் சித்தாத்தங்களால் ஈர்க்கப்பட்ட அவர்கள் வாட்ஸ்-அப் குழு மூலமாக குண்டு தயாரிக்கும் வீடியோக்களை பகிர்ந்ததும், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஹேக்கர்களுடன் தொடர்பில் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் இளைஞர்களுக்கு மூளைச்சலவை செய்து அவர்களை பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவாளர்களாக மாற்றியதும் தெரியவந்தது.

இதையடுத்து அதில் தொடர்புடையவர்களை பிடிக்க தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். அதன்படி கடந்த 12-ந் தேதி உத்தரபிரதேச மாநிலம் ஆசம்காத் என்ற இடத்தைச் சேர்ந்த முகமது நபீல் என்பவரை அந்த மாநில தீவிரவாத தடுப்பு படை பிரிவு போலீசார் கைது செய்தனர். அவர் அளித்த தகவலில் உத்தரபிரதேச மாநிலம் சித்தார்த்நகர் மாவட்டத்தைச் சேர்ந்த அப்துல்குத்தூஸ் என்பவரின் மகன் மக்சூத் அலி (வயது 19) என்ற வாலிபருக்கு இதில் முக்கிய பங்கு இருப்பது தெரியவந்தது.

மக்சூத் அலியை பற்றி விசாரித்தபோது அவர் பெங்களூருவில் தங்கியிருந்து அங்குள்ள மனிதவள முகமை நிறுவனத்தில் பணியாற்றி வருவது தெரியவந்தது. உத்தரபிரதேச போலீசார் பெங்களூரு விரைந்து சென்றனர். விசாரித்தபோது மக்சூத் அலி அங்கு இல்லை. அவர் கோவையில் நடைபெறும் ஒரு கண்காட்சியில் பங்கேற்பதற்காக சக ஊழியர்களுடன் சென்று இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

கோவையில் கைது

இதையடுத்து உத்தரபிரதேச தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார், கோவை போலீசாரின் உதவியை நாடினர். போலீசார் தேடி வந்த மக்சூத் அலி, கோவை ஹோப்கல்லூரி அருகே உள்ள ஓட்டலில் நண்பர்களுடன் தங்கியிருப்பதை கோவை போலீசார் அறிந்தனர். தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசாரும், கோவை போலீசாரும் இணைந்து அதிரடியாக அந்த ஓட்டலுக்கு சென்று மக்சூத் அலியை கைது செய்தனர். பெங்களூருக்கு புறப்படுவதற்காக அவர் தயார்நிலையில் இருந்துள்ளார். அதற்குள் போலீசார் அவரை மடக்கி பிடித்து விட்டனர்.

மக்சூத் அலியை தமிழக போலீசார், உத்தரபிரதேச போலீசாரிடம் ஒப்படைத்தனர். பின்னர் மக்சூத் அலி லக்னோ அழைத்துச் செல்லப்பட்டார். முதற்கட்ட விசாரணையில் அவர் வாட்ஸ்-அப் குழு மூலம் பயங்கரவாத இயக்கத்தில் சேர இளைஞர்களை தூண்டியது மட்டுமல்லாமல் தனியாக இன்ஸ்டாகிராம் பக்கத்தையும் தொடங்கி ஆள் சேர்த்து வந்ததும் தெரியவந்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com