‘சர்க்காரா அல்லது சர்க்கஸ் கம்பெனியா? என தெரியவில்லை’ - தவெக அரசு குறித்து உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்!

முதலமைச்சரின் கேள்விகளுக்கு மூன்று அமைச்சர்கள்தான் பதில் கூறுவார்கள்.
‘சர்க்காரா அல்லது சர்க்கஸ் கம்பெனியா? என தெரியவில்லை’ - தவெக அரசு குறித்து உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்!
Published on

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையில் திமுக நிர்வாகி வி.கே.வெங்கடேசன் என்பவரின் மகன் திருமணத்தில் கலந்துகொண்டு, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி வாழ்த்துரை வழங்கினார். அப்போது பேசிய அவர்.,

தொடர் தஞ்சாவூர் பயணம்

கடந்த சில மாதங்களாகவே இந்த தஞ்சாவூர் மாவட்டத்துக்கு அடிக்கடி வந்துகொண்டிருக்கிறேன். கடந்த மூன்று மாதங்களில், நான்கு முறை வருகை தந்துள்ளேன். அப்படியே நான் வரவில்லை என்றாலும், இந்த அரசு என்னைக் கைது செய்து, அவர்களே இந்த தஞ்சாவூர் மாவட்டத்துக்கு அழைத்து வருகிறார்கள்.

இரண்டு வாரங்களுக்குள் மூன்று முறை வந்துவிட்டேன். கடந்த 3-ஆம் தேதி என்ன நடந்தது என்பதை, நீங்கள் அனைவரும் பாத்திருப்பீர்கள். தமிழ்நாட்டில் எங்கு பேசினாலும், தஞ்சாவூர் மாவட்டத்தில் பேசும்போது மிகவும் ஜாக்கிரதையாகப் பேச வேண்டும்.

நாம் பேசவில்லை என்றாலும், பரவாயில்லை, கீழே இருந்து பேசி, நம்மை மாட்டிவிட்டுவிடுவார்கள். இன்றைக்கு அந்தமாதிரி அண்ணன் துரை.சந்திரசேகரன் அவர்கள் சில வார்த்தைகளைக் கூறி, என்னை மாட்டிவிட்டிருக்கிறார்.

அதற்கும் நான்தான் பொறுப்பேற்க வேண்டும். பரவாயில்லை, இந்தக் கைது நடவடிக்கைகளுக்கெல்லாம் பயந்தவன் கிடையாது, இந்த உதயநிதி என்பது இந்த அரசுக்கு இந்நேரம் தெரிந்திருக்கும்.

கைதுக்கு அஞ்சுபவன் அல்ல

கடந்த 3-ஆம் தேதி, தஞ்சையில் விவசாயிகளுக்கு ஆதரவாக, அவர்களின் கோரிக்கைகளை இந்த அரசு நிறைவேற்ற வேண்டும் என்று ஒரு மிகப்பெரிய போராட்டத்தை நடத்தினோம்.

நான் கலந்துகொண்டு என் தலைமையில் நடந்தது. நம் கூட்டணிக் கட்சித் தலைவர்கள், விவசாயிகள் சங்கத்தைச் சார்ந்தவர்கள் எல்லாம் வந்து கலந்துகொண்டார்கள். நான் தலைமை தாங்கி கடைசியாகப் பேசினேன்.

கிட்டத்தட்ட 22 நிமிடம் பேசியிருக்கிறேன். காவிரியில் தண்ணீர் வரவில்லை என்று சொன்னேன். அதுமட்டும் சொல்லவில்லை, இன்னும் நிறைய பேசியிருக்கிறேன். டம்மி முதலமைச்சர் என்றேன், ஒரு கேடுகெட்ட அரசாங்கம் அமைந்திருக்கிறது. ஒரு வெட்கங்கெட்ட முதலமைச்சர் தமிழ்நாட்டுக்கு அமைந்திருக்கிறார் என்று சொன்னேன்.

தேர்தல் வாக்குறுதி கொடுத்தீர்களே, அதையெல்லாம் செயல்படுத்துவதற்கு உங்களுக்கு வக்கில்லை என்று சொன்னேன். அதற்கெல்லாம், அவர்களுக்கு கோபம் வரவில்லை. காவிரியில் தண்ணீர் வரவில்லை என்று சொன்னதும், கோபம் வந்துவிட்டது.

அதற்காக, என்னை இரவோடு இரவாக தஞ்சாவூரில் இருந்து காவல்துறையினரை அனுப்பி, அதிகாலையில் என் வீட்டுக்கு வந்துவிட்டார்கள். என்னைக் கைது செய்தார்கள்.

சர்க்காரா அல்லது சர்க்கஸ் கம்பெனியா?

சட்டமன்றத்தில் மக்கள் பிரச்னை, விவசாயிகள் பிரச்னை, சட்டம் ஒழுங்கு பிரச்சினை இதைப் பற்றியெல்லாம் பேசலாம் என்று நாங்களெல்லாம் குறிப்புகளெல்லாம் எடுத்துக்கொண்டு போகிறோம்.

ஆனால், நாங்கள் கேட்கக்கூடிய எந்தக் கேள்விக்கும் முதலமைச்சர் எழுந்து பதில் சொல்வது கிடையாது. நீங்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறீர்கள், தொலைக்காட்சியில் பார்த்திருப்பீர்கள்.

ஒரு மூன்று அமைச்சர்கள் மட்டுமே இருக்கிறார்கள். அனைத்துக் கேள்விகளுக்கும் அந்த மூன்று அமைச்சர்கள்தான் எழுந்து பதில் சொல்கிறார்கள். அதுவும் நாங்கள் கேட்கக்கூடிய கேள்விக்கான பதில் கிடையாது. அனைத்தையும் திசை திருப்புவது போலத்தான் இருக்கிறது. திசை திருப்பும் உத்திகள் அவ்வளவுதான்.

உதாரணத்திற்கு, அன்று செந்தில் பாலாஜி மின்சாரத் துறையில் மானியக் கோரிக்கையில் பேசிக்கொண்டிருக்கிறார். அவர் என்ன கேட்கிறார்? மின்சாரக் கட்டணம் இந்த மூன்று மாதங்களில் அதிகமாகிவிட்டது. அளவீட்டைச் சரியாக எடுக்கமாட்டேன் என்கிறார்கள் என்பதுதான் அவர் கேட்ட கேள்வி.

ஆனால், சம்பந்தப்பட்ட துறையின் அமைச்சர் அதற்குப் பதில் சொல்ல வக்கில்லாமல், அந்தப் பிரச்சினையைத் திசை திருப்புவது போல ஒரு பதிலைக் கூறுகிறார்.

தொடர்ந்து இந்த அரசு இதைச் செய்துகொண்டிருக்கிறது. அமைச்சர் பெருமக்களும் ஆளுங்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களும் மக்கள் பிரச்சினையைப் பேசுவதற்கு வரவில்லை.

அவர்களுக்குத் தேவையானதெல்லாம் அன்று ஒரு நான்கு ரீல்ஸ் கிடைத்தால் போதும். இவர்கள் சர்க்கார் நடத்துகிறார்களா அல்லது சர்க்கஸ் கம்பெனி நடத்துகிறார்களா என்று கேட்கும் அளவுக்குத்தான் இன்று அரசின் செயல்பாடுகள் இருக்கின்றன.

இந்தியாவின் முதன்மை மாநிலம்

இதையே சற்றுப் பின்னோக்கி பாருங்கள். கடந்த 5 ஆண்டுகளாக நம்முடைய கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக நம் தமிழ்நாட்டைக் கொண்டுவந்தார்.

11.19 சதவிகித வளர்ச்சியோடு இந்தியாவில் வளரும் மாநிலங்களில் முதன்மை மாநிலமாகத் தமிழ்நாடு இருந்தது. இன்று அதைக்கொண்டு போய் பாதாளத்தில் தள்ளிவிட்டார்கள்.

இன்றைக்கு இந்த அரசாங்கம் ஒரு டம்மி அரசாங்கமாக, தமிழ்நாட்டின் வளர்ச்சியைப் பின்னோக்கி இழுத்துக்கொண்டு போய்க்கொண்டிருக்கிறது.” என தெரிவித்தார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com