

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி இன்று உருவாக வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் இன்று உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதியால் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் 2 நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வானிலை ஆய்வு மையத்தின்படி, தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் இன்று (வெள்ளிக்கிழமை) காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும்.
இது வட மேற்கு திசையில் நகர்ந்து நாளை (சனிக்கிழமை) ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாகவும், தொடர்ந்து புயலாக வலுப்பெறும் என கணிக்கப்பட்டுள்ளது. இது புயலாக மாறினால் ஈரான் பரிந்துரைத்த 'அக்வான்' என பெயரிடப்படும்.
இதுபோல மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் வளிமண்டல சுழற்சி நிலவுகிறது.
இதனால் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களான நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி, விருதுநகர், கன்னியாகுமரி, நெல்லை ஆகிய மாவட்டங்களிலும் வட கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்றும், நாளையும் மழை பெய்யக்கூடும்.
வருகிற 15, 16ந்தேதிகளில் மிதமான நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் மழையும் நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி, விருதுநகர், கன்னியாகுமரி மற்றும் நெல்லை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசான மழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.
சென்னையை பொறுத்தவரை இன்று வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் என்பதால் அந்தமான் மற்றும் தென்கிழக்கு வங்கக்கடலுக்கு இன்றும், நாளையும், 15, 16ந்தேதிகளில் தென்கிழக்கு வங்கக்கடலுக்கும் செல்ல வேண்டாம் என்று மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.