

பேரூர் பட்டீஸ்வரர் கோவிலிலும் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியின்போது முறைகேடு நடந்து இருப்பதாக புகார் எழுந்துள்ளது.
கோவை நகரின் மத்தியில் அமைந்துள்ள கோனியம்மன் கோவில் மற்றும் பேரூரில் அமைந்துள்ள பட்டீஸ்வரர் கோவில் ஆகியவை மாவட்டத்தில் மிக முக்கிய கோவில்களாக திகழ்ந்து வருகின்றன.
சமீபத்தில் கோனியம்மன் கோவிலில் உண்டியல் பணம் எண்ணும் பணியின் போது முறைகேடு நடந்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பணம் இருந்த உண்டியலை மறைத்து காலி உண்டியலை வைத்து பணம் மோசடி செய்யப்பட்டு இருப்பது உறுதியானது. அதன்பேரில் கோவில் ஊழியர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த பரபரப்பு அடங்குவதற்குள் பேரூர் பட்டீஸ்வரர் கோவிலிலும் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியின்போது முறைகேடு நடந்து இருப்பதாக புகார் எழுந்துள்ளது. பேரூர் பட்டீஸ்வரர் கோவிலுக்கு வரும் பக்தர்கள் உண்டியலில் இடும் காணிக்கை மாதந்தோறும் வங்கிக்கணக்கில் சேர்க்கப்படுகிறது. உண்டியலில் ரொக்கப்பணம், தங்கம், வெள்ளி, பித்தளை உள்ளிட்டவை காணிக்கையாக செலுத்தப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் ஜலேந்திரன் என்ற சிவபக்தர், கோவில் உண்டியல் எண்ணிக்கையின் போது அடிக்கடி தங்கம் மாயமாவதாக இணை ஆணையர் ரமேஷ் மற்றும் கோவில் உதவி ஆணையர் சத்யவதி ஆகியோரிடம் புகார் செய்துள்ளார். அந்த புகாரின் பேரில் கோவில் ஊழியர்கள் 40-க்கும் மேற்பட்டோரிடம் உதவி ஆணையர் சத்யவதி விசாரணை மேற்கொண்டுள்ளார். தொடர் விசாரணையில் தற்காலிக பெண் பணியாளர் மீது குற்றம்சாட்டப்பட்டு உள்ளது. அவரிடம் உதவி ஆணையர் சத்யவதி தொடர் விசாரணையில் ஈடுபட்டுள்ளார்.
இதுபற்றி உதவி ஆணையர் சத்யவதியிடம் கேட்டபோது புகாரின் பேரில் அனைத்து பணியாளர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விசாரணை முடிவில் புகாரில் கூறப்பட்டது உண்மை என்பது தெரியவந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.