

அரசு மருத்துவமனைகளில் பணிபுரிந்து வரும் தொகுப்பூதியம் மற்றும் ஒப்பந்த அடிப்படையிலான செவிலியர்கள், தங்களுக்குப் பணி நிரந்தரம் வழங்க வேண்டும் மற்றும் ‘சம வேலைக்கு சம ஊதியம்’ அளிக்க வேண்டும் உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு முழுவதும் அரசு மருத்துவமனைகளில் பணிபுரிந்து வரும் தொகுப்பூதியம் மற்றும் ஒப்பந்த அடிப்படையிலான செவிலியர்கள், தங்களுக்குப் பணி நிரந்தரம் வழங்க வேண்டும் மற்றும் ‘சம வேலைக்கு சம ஊதியம்’ அளிக்க வேண்டும் உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை எழும்பூரில் நேற்று காலை முதல் தீவிர போராட்டத்தை தொடங்கினர். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான செவிலியர்கள் திரண்டு வந்து இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
காலை முதல் உணவை புறக்கணித்து செவிலியர்கள் நடத்திய போராட்டம் இரவிலும் தொடர்ந்ததால் அங்கு கடுமையான பதற்றம் நிலவியது. செவிலியர் சங்க பிரதிநிதிகளை பேச்சுவார்த்தைக்கு அழைப்பது மற்றும் காவல்துறையினரின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பாக இரு தரப்பிற்கும் இடையே வாக்குவாதங்கள் எழுந்தன. இதில் சில செவிலியர்கள் மயக்கமடைந்ததைத் தொடர்ந்து, மருத்துவக் குழுவினர் அவர்களுக்குப் முதலுதவி சிகிச்சை அளித்தனர்.
இதனைத் தொடர்ந்து நள்ளிரவில் உயர் அரசு அதிகாரிகள் மற்றும் சுகாதாரத்துறை செயலாளருடன், செவிலியர் சங்கத்தின் முக்கிய நிர்வாகிகள் தீவிர பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போதே செவிலியர்கள் முன்வைத்த கோரிக்கைகள் மற்றும் கோரிக்கை பரிசீலனைகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. செவிலியர்களின் நியாயமான கோரிக்கைகளை அரசு பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்கும் என்று அதிகாரிகள் தரப்பில் உறுதியளிக்கப்பட்டது.
அரசின் இந்த வாக்குறுதியைத் தொடர்ந்து, செவிலியர்கள் தங்களது போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெற முடிவெடுத்தனர். இருப்பினும், அரசு உறுதியளித்தபடி வருகிற நவம்பர் 3-ஆம் தேதிக்குள் பணி நிரந்தரம் உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகளை நிறைவேற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கெடு விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட அந்தத் தேதிக்குள் கோரிக்கைகள் தீர்க்கப்படாவிட்டால், தமிழகம் தழுவிய அளவில் மீண்டும் வலுவான போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் எனச் செவிலியர் சங்க நிர்வாகிகள் எச்சரித்துள்ளனர்.