

ரவுடி சுள்ளான் மதன் கொலையை தொடர்ந்து கடந்த புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் போலீசார் விடுத்த எச்சரிக்கைகளைத் தொடர்ந்து, பல பயனர்கள் அந்த வீடியோக்களை நீக்கிவிட்டு, சண்டைகள் குறித்து தங்களுக்கு எதுவும் தெரியாது என்று கூறியுள்ளனர்.
சிவகங்கை மாவட்டம் மேலமங்கலத்தில் கடந்த 18-ந்தேதி சரித்திரப் பதிவேடு குற்றவாளியும், பிரபல ரவுடியுமாக வலம் வந்த மதன் என்ற சுள்ளான் மதன் என்பவர் பழிக்குப்பழி வாங்கும் நோக்கில் படுகொலை செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து, இன்னும் தலைகள் சிதறும், ரத்த ஆறு ஓடும் என்று ஆத்திரமூட்டும் பதிவுகள் இன்ஸ்டாகிராம், முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது.
அவ்வாறு பதிவிட்டவர்கள் மீது காவல்துறை கடும் நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், வெளிப்படையான குற்றப் பின்னணி இல்லாத நபர்களின் இன்ஸ்டாகிராம் கணக்குகளை வாடகைக்கு எடுக்க, கும்பல் உறுப்பினர்கள் ஒரு பதிவிற்கு ரூ.400 செலுத்தி வருகின்றனர்.
அதன்படி சமூகவலைதள கணக்கு வைத்திருப்பவர்கள் இன்ஸ்டாகிராம் உரையாடல்கள் மற்றும் வாட்ஸ்அப் மூலம் பதிவின் உள்ளடக்கத்தையும், அறிவுறுத்தல்களையும் பெறுகிறார்கள். பதிவுகளைப் பிறருக்கு இடுபவர்களே உரையாடல், பின்னணி இசை, படத்தொகுப்பு மற்றும் தொனியைத் தீர்மானிக்கிறார்கள். இதனால், காவல்துறையின் கண்காணிப்பிற்கு அப்பாற்பட்ட சுயவிவரங்களில் அச்சுறுத்தல்கள் தோன்றுகின்றன, என்று ஒரு மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இந்தக் கணக்குப்பெயர்களில் சில, மற்ற மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும் இருக்கிறார்கள்.
ரவுடி சுள்ளான் மதன் கொலையை தொடர்ந்து கடந்த புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் போலீசார் விடுத்த எச்சரிக்கைகளைத் தொடர்ந்து, பல பயனர்கள் அந்த வீடியோக்களை நீக்கிவிட்டு, சண்டைகள் குறித்து தங்களுக்கு எதுவும் தெரியாது என்று கூறியுள்ளனர். மற்றொரு கணக்கு வழங்கிய உள்ளடக்கத்தைப் பதிவேற்றுவதற்காகத் தங்களுக்கு ரூ.400 கிடைத்ததாக சிலர் ஒப்புக்கொண்டதும் வைரலாகி வருகிறது.
அந்த வகையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல், சிவகங்கை போலீசார் 44 கணக்குகளை (41 இன்ஸ்டாகிராம் மற்றும் மூன்று முகநூல் கணக்குகள்) முடக்கியுள்ளனர். மேலும் ஆத்திரமூட்டும் பதிவுகள் தொடர்பாக 6 வழக்குகளையும் பதிவு செய்துள்ளனர். 18 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஆரம்பகட்ட இரண்டு வழக்குகளில், பகைமையை வளர்ப்பது மற்றும் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் அறிக்கைகளைப் பரப்புவது தொடர்பான பாரதிய நியாய சம்ஹிதையின் 196 (1) மற்றும் 353 (2) பிரிவுகள் பயன்படுப்பப்பட்டன. இந்தப் பிரச்சினை சிவகங்கையைத் தாண்டியும் பரவியுள்ளது. பொதுக் கூட்டங்கள், பதாகைகள் மற்றும் ஊர்வலங்களுக்குப் பதிலாக, ஆத்திரமூட்டும் காணொளிகள் இடம்பெற்று, சாதி அடையாளம் வெளிப்படுத்தப்படும் விதத்தை சமூக ஊடகங்கள் மாற்றியமைத் துள்ளதாக பலரும் குற்றம்சாட்டி உள்ளனர்.
சாதி அடிப்படையிலான அமைப்புகள் இளைஞர்களின் உணர்வுகளையும், குழுவின் விசுவாசத்தையும் சுரண்டி, இன்ஸ்டாகிராமை மோதல்களுக்கான ஒரு தளமாக மாற்றி வருகின்றன. ஆத்திரமூட்டும் பதிவுகள் பெரும்பாலும் பதிலடி தாக்குதல்களைத் தூண்டி, சமூகங்களுக்கு இடையேயான பதற்றத்தை அதிகரிக்கின்றன. சக நண்பர்களின் அழுத்தமும் மதுவும் நிலைமையை மேலும் மோசமாக்குகின்றன என்று பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.