

அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர். மேலும் இன்று வேளாண்மை பல்கலைக்கழகத்தின் பூச்சியியல் துறை அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வில் ஈடுபடுகிறார்கள்.
கோவை மாவட்டம் காடாம்பாடி ஊராட்சி, குமாரபாளையம் பிரிவு அருகே உள்ள தனியார் கோழிப்பண்ணை நிறுவனத்திற்கு சொந்தமான குடோனில் சுமார் 1,000 டன் மக்காச்சோளம் சேமித்து வைக்கப்பட்டுள்ளது.
இதிலிருந்து பரவியதாக கூறப்படும் ஒருவகையான பூச்சிகள், அருகிலுள்ள குடியிருப்பு பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் புகுந்து கடந்த 7 நாட்களாக பொதுமக்களை பெரும் சிரமத்திற்கு உள்ளாக்கி வருகின்றன.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் பொதுமக்கள் முறையிட்டும் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. தொடர்ந்து பூச்சித்தொல்லை நீடிப்பதால் பாதிக்கப்பட்ட மக்கள் போராட்டத்தில் ஈடுபடும் நிலை ஏற்பட்டுள்ளதாக அவர்கள் குற்றம்சாட்டினர்.
இந்த பிரச்சினைக்கு உடனடி தீர்வு காண வேண்டும் என கோவை மாவட்ட நிர்வாகம், சுகாதார துறை மற்றும் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் பூச்சியியல் துறை உடனடியாக இப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டு, பூச்சியின் இனத்தை கண்டறிந்து கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பொது மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இதையடுத்து நேற்று இரவு அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர். மேலும் இன்று வேளாண்மை பல்கலைக்கழகத்தின் பூச்சியியல் துறை அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வில் ஈடுபடுகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.