ஞானேஷ்குமாருக்கு எதிரான 3 நாள் போராட்டத்தை இந்தியா கூட்டணி வெற்றிகரமாக நடத்த வேண்டும்- திருமாவளவன்

‘ஜனநாயகம் காப்போம்’ என்ற பெயரில் பேரணி ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம்.
Thol.Thirumavalavan
Published on: 

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி. தமிழகத்தில் 3 நாட்கள் நடைபெறும் ஜனநாயகம் காப்போம் என்ற போராட்டம் குறித்து முகநூலில் தொண்டர்களிடம் பேசியதாவது:-

இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவி நீக்கம் செய்யக்கோரி இந்தியா கூட்டணி தலைவர்கள் டெல்லியில் பேரணி முற்றுகை போராட்டம் அறவழியில் நடத்தினார்கள். இந்தப் போராட்டம் தேசிய அளவில் மிகப்பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த சூழ்நிலையில் இந்தியா கூட்டணி கட்சிகள் மிகப்பெரிய அளவில் ஆங்காங்கே அறப்போராட்டம் நடத்துகின்றன. தமிழ்நாட்டில் வருகிற 13, 14 மற்றும் 15 ஆகிய 3 நாட்கள் இதே கோரிக்கையை வலியுறுத்தி ‘ஜனநாயகம் காப்போம்’ என்ற பெயரில் பேரணி ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம்.

13-ந் தேதி சில மாவட்டங்களிலும் 14-ந்தேதி வேறு சில மாவட்டங்களிலும் 15-ந் தேதி சென்னையில் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளன.

இந்த கூட்டணியில் த.வெ.க. தற்போது இடம் பெற்று இருக்கிறது. இந்தியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள முன்னணி பொறுப்பாளர்கள் ஒருங்கிணைத்து வெற்றிகரமாக இந்த போராட்டத்தை நடத்த வேண்டும்.

அதில் விடுதலை சிறுத்தைகள் சார்பாக ஒரு ஒருங்கிணைப்பபாளரும் கண்டன உரையாற்ற ஒருவரும் என 38 ஒருங்கிணைப்பாளர்கள் 38 பேச்சாளர்கள் பட்டியல் தமிழக காங்கிரஸ் கட்சியிடம் வழங்கி இருக்கிறோம். அந்தப் பட்டியல் நாளை வெளியிடப்படும்.

மண்டல செயலாளர்கள், ஒருங்கிணைப்பாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

கட்சியில் 93 மாவட்டங்களில் தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், சில மாவட்டங்களில் இப்போது மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டவர்களும் தேர்தலுக்கு உட்படுத்தப்பட வாய்ப்பு இருக்கிறது.

கடந்த 8 மாதமாக ஒரு அங்குலம் கூட எந்த பணியும் செய்யாமல் சில மாவட்ட செயலாளர்கள் உள்ளனர். செயலிழந்த அந்த மாவட்ட செயலாளர்கள் மாற்றப்படுவார்கள்.

ரூ.1 லட்சம் நிதி ஒவ்வொரு மாவட்டமும் வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தினேன். ஆனால் ஒரு சில மாவட்ட செயலாளர்கள் அதனை வழங்கவில்லை.

அப்படிப்பட்ட மாவட்ட செயலாளர்கள் மற்றும் தற்போது நியமிக்க மாவட்டச் செயலாளரும் நீக்கப்பட வாய்ப்பு உள்ளது.

கடலூர் மாவட்டத்தில் நிர்வாகிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அங்கு கட்சி நிர்வாகிகள் கைகலப்பில் ஈடுபட்டது அதிர்ச்சி அளிக்கிறது.

எனவே 3 பேர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. யார் மீதும் காழ்ப்புணர்ச்சியோடு இந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை. 3 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். புதிய பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com